இலங்கையில் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் இலங்கையின் விசாரணை அதிகாரி ஒருவர் ஜாஸ்மின் சூக்காவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்திடம் [ITJP] சாட்சியம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான அதிர்ச்சி நிறைந்த அறிக்கை ஒன்றை ஐ.ரி.ஜே.பி நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குற்றத்தில் ஈடுபட்ட 50 சிறப்பு இராணுவ பொலிசாரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் ஆணையாளருக்கும் கையளிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது;
ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றுவதில் இருந்து தடை செய்யப்பட்ட வேண்டிய விசேட அதிரடிப்படையின் 50 இற்கும் மேற்பட்ட இலங்கை சிறப்பு இராணுவ பொலிசாரின் பெயர்களை கொண்ட ஒரு இரகசிய பெயர்ப்பட்டியலை ஐ.ரி.ஜே.பி தயாரித்துள்ளது.
விசேட அதிரடிப்படையினர் உட்பட பாதுகாப்பு படைகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை புரிந்துள்ளார்கள் என ஐ.நா தெரிவிக்கும் சூழலில் இந்த தனிப்பட்ட நபர்கள் குர்ரவாளிகாளாக சந்தேகிக்கப்படுவார்களாக அல்லது இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முன்னரங்க நிலையில் போரில் ஈடுபட்டவர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
ஆபிரிக்காவில் ஐ.நாவின் அமைதி காக்கும் படையில் ஈடுபட்டுள்ள இலங்கையின் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் 2006 – 2017 ஆம் ஆண்டு காலப்பக்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் கண்மூடி தனமாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இலங்கையில் மனிதவுரிமை மீறல்களுக்கு பொறுப்பான அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 24 விசேட அதிரடிப்படையினரின் பெயர்களையும் இலங்கையின் போரின் போது முன்னரங்க முக்கிய சண்டை பணிகளில் ஈடுபட்ட 32 விசேட அதிரடிப்படை அதிகாரிகளதும் பெயர்களை கொண்டுள்ளது.
இதனால் இவர்கள் ஐ.நா அமைதிகாக்கும் நடடவடிக்கையில் பணியாற்றுவதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும். பொலிஸ் கொமாண்டோக்களும் தற்போது வெளிநாடுகளுக்கு ஐ.நா அமைதி காக்கும் படையினர்களாக அனுப்பபட்டு வருகின்றார்கள். அத்துடன் இராணுவத்தை போன்று கடுமையான மீளாய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் படங்கள், பெயர்கள், என அனைத்து தகவல்களையும் இந்த மீளாய்வு நடவடிக்கைகளுக்காக வழங்க தயாராக இருக்கின்றோம்.
இந்த அறிக்கை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செயற்பட்ட சிங்களவர்கள் மற்றும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் வழங்கிய சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
கொழும்பில் விசாரணைக்காக யுத்த காலத்தில் அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை கயிற்றால் அல்லது வயரால் கழுத்தை நசுக்கி கொல்லுவோம், கத்தியால் குத்துவோம் அல்லது சாகும் வரை அடித்து கொல்லுவோம். என கொழும்பை சேர்ந்த ஒரு இராணுவத்தின் விசாரணை அதிகாரி ஐ.ரி.ஜே.பி யிடம் கூறியுள்ளார்.
அனைத்து பாதிக்கப்பட்ட தரப்பும் இறுதியில் கொல்லப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகளை அனுமதித்தல், மறைமுக கொலைகள் என்பவற்றை இந்த விசேட அதிரடிப்படையே அரங்கேற்றி வந்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இதற்கு ஆதரவாக தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவும் இருந்து வந்துள்ளது. என பல விடயங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.