குவைத்தில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்நாட்டு தூதரை தனது நாட்டிலிருந்து குவைத் அரசு வெளியேற்றியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் இருந்து மட்டும் 23 லட்சம் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடான குவைத்தில் 2.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். குவைத்தில் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதாக புகார் எழுந்தது.
இது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ள நிலையில், குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தூதரகம் மூலம் விசாரிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
ஆனால், குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் விசாரணைக்கு குவைத் அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்பட்டது. இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் விழுந்தது. இந்நிலையில், குவைத் நாட்டுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ரெனாடோ பெட்ரோ வில்லா நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. #