அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவில் பணியாற்றுவோரின் துணைக்கு வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் மற்றும் ஐ.டி. துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) அங்கேயே பணியாற்றுவதற்கு வசதியாக எச்-4 விசா, கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது அமெரிக்காவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த வெளிநாட்டினருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதுவும் இந்தியர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில் எச்-4 விசாவில் வேலை பெற்றிருந்தவர்களில், 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்.
இந்த எச்-4 விசா நடைமுறையை நிறுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ள இந்திய தூதரகம், இது குறித்து சட்ட ஆலோசகர்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளுடன் பேசி வருகிறது.
அமெரிக்க அரசின் எச்-4 விசா ரத்து நடவடிக்கைக்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் மற்றும் தொழில்நுட்ப துறையில் இருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் சிலிக்கான்வேலியை மையமாக கொண்டு செயல்படும் ஐ.டி. அமைப்பான ‘எப்.டபிள்யூ.டி. யு.எஸ்.’ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எச்-4 விசாவை ரத்து செய்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றுவதால் அவர்களின் குடும்பத்துக்கு பேரழிவு ஏற்படுவதோடு, நமது பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். எனவே எச்-4 விசா வழங்குவது முக்கியமானது.
எச்-4 விசா, குறிப்பிட்ட சிலருக்கு தங்கள் துணை நிரந்தர வீட்டை பெறுவது வரை காத்திராமல், லாபகரமான ஒரு வேலைக்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த விசா இல்லாமல் எச்-1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகள், சட்டப்பூர்வமாக பணியாற்றவோ, தங்கள் குடும்பத்துக்கு நிதி பங்களிப்பு செய்யவோ முடியாது. எனவே இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அமைப்பை பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல எச்-4 விசா ரத்து செய்வதை எதிர்த்து கலிபோர்னியாவை சேர்ந்த மூத்த எம்.பி.க்கள் 15 பேர் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிர்ஸ்டன் எம்.நீல்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறுகையில், ‘எச்-4 விசா, சுமார் 1 லட்சம் பேருக்கு பணியாற்றவும், தங்கள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை மூலம் எச்-1பி விசா வைத்திருந்தோரின் சுமையை ஒபாமா நிர்வாகம் குறைத்தது’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.
எச்-4 விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படுவதன் மூலம், இங்கு (அமெரிக்காவில்) முதலீடு செய்யப்படும் அந்த அதிக திறன் வாய்ந்த குடியேறிகளை புறந்தள்ளுவதாக கூறியுள்ள அந்த எம்.பி.க்கள், இது ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கான பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே கடந்த 2015-17-ம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள டாப் 7 ஐ.டி. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எச்-1பி விசா 43 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 14,792 விசாக்கள் பெற்று வந்த நிலையில், தற்போது வெறும் 8,468 விசாக்களையே இந்த கம்பெனிகள் பெற்று இருக்கின்றன.