அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் இந்திய பெண் டாக்டர் தோல்வி

285 0

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அமெரிக்க வாழ் இந்திய பெண் டாக்டர் திபிர்னேனி தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு அரிசோனா மாகாணத்தில் இருந்து குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டிரென்ட் பிராங்ஸ். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால் கடந்த டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு சிறப்பு தேர்தல் நடத்தப்பட்டது. இந்ததேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் செனட்டர் டெப்பி லெக்சோவும், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க வாழ் இந்திய பெண் டாக்டரும், புற்றுநோய் ஆய்வு விஞ்ஞானியுமான ஹிரல் திபிர்னேனியும் போட்டியிட்டனர்.இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதில் டெப்பி லெக்சோ மிகச்சிறிய சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லெக்சோவை விட திபிர்னேனி, 9 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இந்த தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் சில உள்ளூர் ஊடகங்கள், லெக்சோ வெற்றி பெற்றதாக அறிவித்தன.

சிறப்பு தேர்தல் நடந்த அந்த தொகுதி கடந்த 1980-ல் இருந்து குடியரசு கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. எனினும் இந்த சிறப்பு தேர்தலில் அந்த கட்சி ஒற்றை இலக்க வாக்கு சதவீத வித்தியாசத்திலேயே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment