உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

340 0

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இடைநிலை ஆசிரியர்களுக்கு (சாதாரண நிலை) 6-வது ஊதியக் குழுவிற்கு முன்னர் 31.12.2005 வரை ரூ.4500 125 7000 என்ற ஊதிய விகிதம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசாணை எண்.234 நிதித் துறை, நாள் 1.6.2009ன்படி இடைநிலை ஆசிரியர்கள் (சாதாரண நிலை) ஊதிய விகிதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் 2800 என திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு, 1.1.2006 முதல் கருத்தியலாகவும் 1.1.2007 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் ஆணைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.500 சிறப்பு படி 1.8.2010 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், சாதாரண நிலையில் ஊதிய விகிதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 1.8.2010 முதல் வழங்கப்படும் சிறப்பு படி ரூ.500-க்கு பதிலாக மாதம் ஒன்றிற்கு ரூ.750 ஆக உயர்த்தி தனி ஊதியமாக வழங்கி அரசாணை எண்.23 (நிதி ஊதியப் பிரிவுத்துறை) நாள் 12.1.2011 -ன்படி ஆணையிடப்பட்டது. இத்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொள்ளப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டும், தனி ஊதியம் 1.1.2011 முதல் பெறும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.20,600 – 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி ஊதியம் ரூ.750, ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஜெயலலிதாவின் அரசு அமல்படுத்தியதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 14,719 கோடி ரூபாய் அளவிற்கு இந்த அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. இருப்பினும், பல்வேறு தரப்பு ஊழியர்களின் நலன் கருதி ஜெயலலிதா அரசு இதனை ஏற்றுக்கொண்டது. அதோடு மட்டுமின்றி, இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு ஒருநபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய இயலும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.) பிறருடைய தூண்டுதலின் பேரில் 23.4.2018 முதல் எந்த வித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நானும், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசிய பின்பும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ஆசிரியர்களின் இந்த பிரச்சினைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு காண வேண்டப்படுகிறது. எனது இந்த கோரிக்கையினை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment