குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தொடர்ந்தார். விசாரணையை சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டின் ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ். ஜார்ஜ் ஆகியோரது பெயர் இந்த ஊழல் புகார் பட்டியலில் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற ஊழல் கண்காணிப்பு ஆணையம் நினைப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் வாதிட்டார். மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை நேர்மையாக நடைபெறுவதாக மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்தது.
இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்ததும், அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சுமார் 3 மாதத்திற்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
குட்கா விவகாரத்தில் மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும். குட்கா தொடர்பாக போதிய விளம்பரம் செய்து மக்களிடம் தகவல் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.