பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் வீரருக்கு த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை நிர்வாகிகளிடம் ஜி.கே.வாசன் வழங்கினார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடந்தது.இதில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சேலம் இன்று வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-சட்டமன்ற தேர்தல் 120 நாட்கள் முடிந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 80 நாட்கள் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.வருகிற உள்ளாட்சித் தேர்தலில் முதல்நிலையில் இருக்கும் இடங்களை கண்டறிந்து நிர்வாகிகளுடன் கருத்து கேட்டு வருகிறோம். 2-ம் நிலையில் இருக்கும் இடங்களை முதல்நிலை கொண்டுவர நிர்வாகிகளை கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும். பாராலிம்பிக் போட்டியில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவருக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிகரங்கள் நீட்ட வேண்டும். த.மா.கா. சார்பில் பதக்கம் பெற்ற மாரியப்பனுக்கு ரூ.50 ஆயிரத்தை நிர்வாகிகளிடம் வழங்கி உள்ளேன். மாரியப்பன் ஊருக்கு திரும்பியதும் அவரிடம் நிர்வாகிகள் வழங்குவார்கள்.
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் நடத்து வருகிறது. இது வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதாகும். அங்கு வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் முப்போக சாகுபடிகள் செய்து வந்தனர். தற்போது மழை பொய்த்து போனதால் 2 போக சாகுபடி மாறி, தற்போது ஒரு போக சாகுபடி விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு லாரி மற்றும் பஸ்கள் இயக்கப்படாததால், இரு மாநிலங்களிலும் பொருளாதாரம் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் மோடியை சந்திதேன் என்றார். இது உண்மை நிலை என்றால் இருமாநிலங்களின் உறவுகளை நடுநிலையோட செயல்பட பிரதமர் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மெத்தனப்போக்கை கடைபிடிக்கக்கூடாது. தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சனையான காவிரி, முல்லை, பாலாறு, சிறுவாணி ஆகியவைகளுக்கு கடிதங்கள் மற்றும் கோர்ட்டு மூலம் தீர்வு என்பது கடமையாக இருக்கக் கூடாது. வலுசேர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்க்கட்சியின் கருத்தை கேட்டு பிரதமரை சந்தித்து காவிரி நீரை தமிழக அரசு பெற்று தரவேண்டும்.
நேற்று தமிழகத்துக்கு வந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரிடம் இருந்து காவிரி, முல்லை, பாலாறு பிரச்சினை மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை குறித்து எடுத்து கூறியுள்ளேன்.
தமிழகத்தில் வன்முறைகள் அதிகமாக நடப்பதால் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை. சேலத்தில் பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை மாற்றி பல்வேறு இடங்களில் தனித்தனியாக பஸ் நிலையம் ஏற்படுத்தி நெரிசலை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.