தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

349 0

201609101503013047_karunanidhi-request-for-tn-government-file-review-petition_secvpf96 டி.எம்.சி. தண்ணீர் தரக்கோரி தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக முதல்-அமைச்சர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்டி, இந்த காவேரி பிரச்சினை பற்றி விவாதித்து நல்லதோர் முடிவினை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவேரி பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பிரதமர் மோடியோ, காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதிலே தலையிட முடியாது என்று கூறியிருக்கிறார். எப்படியோ, பிரதமர் மோடி காவிரிப் பிரச்சினையிலிருந்து நழுவி விட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை அறிய தமிழ்நாட்டு விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனியும் தமிழக அரசு அமைதியாக இருக்காமல், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

13 டி.எம்.சி. வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையே முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது. அதை போல தமிழக அரசும், 96 டி.எம்.சி., தண்ணீரைக் கர்நாடகம் தர வேண்டுமென்றும், காவேரி மேலாண்மை வாரியம் காவேரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை காலவரையறை நிர்ணயம் செய்து இப்போதாவது அமைத்திட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும், சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திட வேண்டும். காவிரி கண்காணிப்புக் குழுவை நம்பி எந்தப் பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

ஏனெனில் அதற்குச் சட்ட அங்கீகாரமோ, மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ கிடையாது. ஜெயலலிதா பாணியில் சொல்ல வேண்டுமென்றால், காவேரிக் கண்காணிப்புக் குழு, பல் இல்லாத குழு! எதுவாயினும், காவேரிப் பிரச்சினையில் ஜெயலலிதா அரசு எதைச் செய்தாலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்து அறிவித்துச் செய்ய வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.