ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்வில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான (UNHCR) இன் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குற்றாரஸ் முன்னிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு நெருக்கமான ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் 15 நாடுகளின் பிரதிநிதிகளில் 11 பேரின் ஆதரவை குற்றாரஸ் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் இவரின் தெரிவில் அதிருப்தியும் ஒரு பிரதிநிதி கருத்தெதுவும் கூறாதிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ முனின் பதவிக்காலம் நிறைவடைவதையிட்டு புதிய செயலாளர் நாயகத்தை தேர்ந்தெடுக்கும நடவடிக்கையில் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா பிரான்ஸ், பிரிட்டன் உட்பட ஏனைய 10 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தன.
அந்தோனியோ குற்றாரஸ் நியூஸிலாந்தின் ஹெலன் கிளார்க் உட்பட 5 ஆண்களும் 5 பெண்களும் உலகின் அதி உயர் ராஜந்திர பதவிக்காக போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.