எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்

300 0

2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்திருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக இருந்திருப்பார் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க. கலந்து கொள்ளாதது ஏன்? என்று மீண்டும், மீண்டும் கேட்கிறார்கள். அந்த விவகாரத்தைப் பொருத்தவரை எல்லாமே மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே நடந்தது.
மற்ற கட்சிகளுக்கு என்று அவர்களது சொந்த நிலைப்பாடு இருக்கக் கூடாதா? அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நினைத்துக் கொண்டிருக்கலாம். கருணாநிதி மட்டும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருந்தால் அதில் நான் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன்.

மு.க.ஸ்டாலினுக்கு என்னைப் பிடிக்காது. நானும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
கலைஞருக்கு உடல் நலம் குன்றிய போது நான் முதல் ஆளாக சென்று அவரை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரிக்க விரும்பினேன். கலைஞருடன் நான் நீண்ட நாட்கள் பழகியுள்ளேன். பல தடவை உடனுக்குடன் நேரில் சந்தித்துப் பேசி உள்ளேன்.

இந்த தடவை கலைஞரை சந்தித்து பேச விரும்பியபோது அவரை சந்திக்க முடியவில்லை. நான் வேறு வழியில் முயற்சி செய்தேன். அப்போது முதலில் மு.க.ஸ்டாலினிடம் பேசுங்கள் என்று சொன்னார்கள்.

பிறகு மு.க.ஸ்டாலின் தரப்பில் இருந்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் மீண்டும் பேசிய அவர்கள் உரிய நேரத்தில் அழைப்பதாக சொன்னார்கள்.
இதையடுத்து நாங்கள் தொடர்ந்து கலைஞரை பார்க்க முயன்றோம். ஒருநாள் அவர்கள் தரப்பில் இருந்து பேசினார்கள். இன்று சூரசம்ஹாரம் என்பதால் நாள் சரி இல்லை என்று சொன்னார்கள்.
நானும் சரி என்றேன். நல்ல நாளில் கலைஞரை சந்திக்கலாம் என்று இருந்தேன். அவர்கள் எங்களை அனுமதிக்கவே இல்லை. அதன் பிறகு நானும் விட்டு விட்டேன்.

கலைஞரை நான் சந்தித்துப் பேசக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு தடுத்து விட்டார். கலைஞரை சந்திக்க வேண்டும் என்று முதல் ஆளாக நான் கேட்ட போதும் அனுமதி மறுக்கப்பட்டது.

கலைஞரை நான் சந்திக்க நினைத்தது அவரது உடல்நிலையை விசாரிப்பதற்காகத்தான். ஆனால் மு.க.ஸ்டாலின் ஏன் என்னைப் பார்த்து பயப்பட்டார் என்று தெரியவில்லை.
2016-ம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடம் கூட்டணிக்காக பேசப்பட்டது. சரியான அளவுக்கு தொகுதிகள் தரும்பட்சத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நானும் தயாராகவே இருந்தேன்.

தி.மு.க.விடம் நாங்கள் 60 தொகுதிகள் ஒதுக்கி தரும்படி கேட்டேன். ஆனால் அவர்கள் 40 இடங்கள்தான் தர முடியும் என்றனர். மேலும் நான் ஆட்சியிலும் வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டேன்.

கூட்டணி ஆட்சிக்கு மட்டும் மு.க.ஸ்டாலின் 2016-ல் ஒத்து கொண்டிருந்தால் இன்று அவரும், நானும் அமைச்சர்களாக இருந்திருப்போம். 2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்திருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக இருந்திருப்பார்.
நல்ல ஒரு வாய்ப்பை ஸ்டாலின் இழந்து விட்டார். இனி அவரால் ஒரு போதும் முதல்-அமைச்சர் ஆகவே முடியாது.

2016-ம் ஆண்டு தேர்தலில் என்னுடன் கூட்டணி வைத்த மக்கள் நல முன்னணி கட்சிகளின் தலைவர்கள் இப்போது மு.க.ஸ்டாலினுடன் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியாவது தன்னை முதல்- அமைச்சர் ஆக்கி விடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் செய்யட்டும். ஸ்டாலின் முதல்வராகட்டும்… பார்க்கலாம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் மட்டுமல்ல இன்னும் 5 நடிகர்கள் கூட அரசியலுக்கு வரட்டும். எதுவும் நடக்கப்போவதில்லை.
கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நிறைய கனவு காண்கிறார்கள்.
ரஜினி இன்னும் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கவில்லை. முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். அவரை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்.
அதுபோல கமல்ஹாசனை கூட எந்த கட்சியும் ஆதரிக்கலாம். தி.மு.க. கூட கமலுக்கு ஆதரவு தெரிவிக்க முடியும்.

பா.ஜ.க.வுக்கு இனி தேர்தல்களில் வெற்றி கிடைக்காது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது. பொருத்திருந்து பாருங்கள். அதுதான் நடக்கும்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 282 இடங்களில் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 182 இடங்கள் கூட கிடைக்காது.

தற்போதுதான் பா.ஜ.க.வுக்கு தோல்வி படலம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெற சுத்தமாக எந்த ஒரு வாய்ப்புமே இல்லை.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Leave a comment