உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு

314 0

H

யாழ்.உடுவில் கல்லூரியில் தற்போது கடமையாற்றிய அதிபர் தனது அறுபது வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவரை மாற்றி அதற்கு பதிலாக புதிய அதிபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. இதனையடுத்து இவ் கல்லூரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவிகளும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் மாணவர்களது போராட்டங்களையும் எதிர்ப்புக்களையும் மீறி கல்லூரி நிர்வாகமானது புதிய அதிபரை நியமித்திருந்தது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவிகளுக்குமிடையில் முரண்பாடு உச்சமடைந்ததுடன் இப் பிரச்சனை மல்லாகம் நீதிமன்றம் வரை சென்றிருந்தது. இதனையடுத்து நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு நேரடியாக வருகைதந்த மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் மிக நீண்ட நேரம் கலந்துரையாடி இப் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பழைய அதிபர் தாமாகவே பதவியில் இருந்து நீங்குவதாகவும் புதிய அதிபர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொறுப்பேற்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
இருந்த போதிலும் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறும் போது உடுவில் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியை சூழ்ந்து அவரது கால்களில் வீழ்ந்து தமக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது அவர்கள் தமது பாடசாலைக்கு பழைய அதிபரையே மீளவும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை பாதிரியார்களும் கல்லூரி நிர்வாகமும் கடுமையாக தாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்திருந்தனர். அத்துடன் இது தொடர்பான விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஜனாதிபதியிடம் மாணவிகள் கையளித்திருந்தனர்.