நகர அபிவிருத்திச் சபை உத்தரவாதம் அளித்தால் மாநகர சபை கட்டிட பணியை ஆரம்பிக்கலாம்!-ஆர்னோல்ட்

650 0

நகர அபிவிருத்தி அதிகார சபை, மாநகர சபை கட்டிடத்திற்கென ஒதுக்கிய நிதியின் உத்தரவாதத்தினை வழங்கும் பட்சத்தில் கட்டிடம் அமைப்பதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநகர சபை தயாராக உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (23) தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கடந்த ஆட்சிக் காலத்தில் மாநகர சபை அமைப்பதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில் கட்டிடத்திற்கான வேலைத்திட்டங்கள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது, உள்ளுராட்சி நடைபெற்று வரும் நிலையில் யாழ்.மாநகர சபைக்கான கட்டிடத்தினை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைககள் முன்னெடுத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

யாழ் மாநகர சபை கட்டிடத்தினை மீண்டும் பழைய இடத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

நவீன வசதிகளுடன், தமிழ் மக்களின் பாரம்பரியம், கலாசார பண்புகள் மாறாது கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

மாநகர சபைக் கட்டிடத்தினைக் கட்டுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் 1000 மில்லியன் ரூபா நிதி தருவதாக உறுதியளித்திருந்தனர்.

கட்டிடத்தின் வேலைத்திட்டங்கள் நிறைவடைவதற்கு 1800 மில்லியன் ரூபா தேவை என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதில் 1000 மில்லியன் ரூபா நிதியை நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வடமாகாண சபை 500 மில்லியன் ரூபாவும், ஏனைய 300 மில்லியன் ரூபாவினை மாநகர சபையும் பொறுப்பேற்க்குமென்ற வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்தொதுக்கப்பட்ட நிதிகளை, நகர அபிவிருத்தி அமைச்சும், வடமாகாண சபை மற்றும் மாநகர சபை உட்பட மாநகர சபையும் அந்த நிதிகளை இரண்டு கட்டங்களாக வழங்கவுள்ளனர்.

அவ்வாறு வழங்கப்படும் நிதிகளைக் கொண்டு, மாநகர சபைக் கட்டிடத்தினை 2 வருடங்களில் நிறைவு செய்யப்படும். இருப்பினும் இடையில் ஏற்பட்ட அரசியல் சலசலப்புக் காரணமாக, மாநகர சபை கட்டிட வேலைத்திட்டங்கள் கிடப்பில் இருப்பதாக பொறுப்பேற்ற பின் அறிந்துள்ளேன்.

கட்டிடத்திற்கான பூர்வாங்க வடிவமைப்பினைச் செய்த பின்னர் நகர அபிவிருத்திச் சபை கூறிய உத்தரவாதத்தினை வழங்கும் பட்சத்தில், மாநகர சபைக் கட்டிடத்திற்கான ஆரம்ப பணிகளை ஆரம்பிக்கமுடியும். நகர அபிவிருத்திச் சபை உத்தரவாதத்திற்கு அமைவாக மாநகர சபைக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment