கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்பூநகரி பிரதேசத்தின் கீழுள்ள இரணைதீவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி இந்த கண்டனப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த போராட்டத்திற்கு எவ்வித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில், தமது கண்டனத்தை தெரிவிக்கும் நோக்கில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரணைமாதா நகரில் இருந்து சுமார் 50 மீன்பிடி படகுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் இரணைதீவு கரையை அண்டி தமது கண்டனப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இரணைதீவும் எமது வளங்களும் எம்மைவிட்டுப் பறிபோகும் மிக ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. அந்த வளங்கள் எமது மக்களால் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அங்கு நாம் மீள்குடியமரவேண்டிய மிக அவசர தேவை எழுந்துள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.