காங். தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை- திருநாவுக்கரசர்

228 0

காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகிலேயே 135 ஆண்டுக்கு மேல் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். இந்த காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரம் நன்றாக இருந்தால்தான் கோபுரம் நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை பலப்படுத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் பிரிந்து சென்றால் கூட தொண்டர்கள் ஓடாமல் காங்கிரஸ் என்ற உணர்வுடன் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அனைத்து தொண்டர்கள் விபரங்களையும் தனது கம்ப்யூட்டரில் பதிந்து விரல் நுனியில் வைத்திருக்க விரும்புகிறார்.

இதற்காக ஒவ்வொரு பூத் வாரியாக 5 பேர் கொண்ட கமிட்டி உருவாக்க உள்ளோம். இப்படி 64 ஆயிரம் வாக்கு சாவடிகளுக்கும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை ராகுல்காந்தி கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து, அவரே நேரடியாக தகவல்களை வழங்குவார்.

தமிழ்நாட்டில் தற்போது அ.தி.மு.க. உடைந்து சிதறிவிட்டது. இந்த ஆட்சி போய் விட்டால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட 2 அணியாக பிரிந்து விடலாம். மோடிதான் அதை சேர்த்து வைத்து, பி.ஜே.பி.யின் பினாமி ஆட்சி நடத்தி வருகிறார். தி.மு.க. மட்டுமே கட்டுக்கோப்புடன் உள்ள பெரிய கட்சியாக உள்ளது. எனவே அதற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய கட்சி காங்கிரஸ்தான் என்பதை, நாம் அதிக ஓட்டு வாங்கி நிரூபிக்க வேண்டும். 2-வது இடத்துக்கு வந்தால்தான் முதல் இடத்துக்கு வர முடியும். மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும். 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிடிலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு பலம் உள்ள கட்சியாகவே உள்ளது. மற்ற கட்சிகள் காணாமல் போய் இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தலைவர்கள் தான் ஒற்றுமையாக இல்லை. அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு விட்டால், நாம் சாதனைகள் படைக்கலாம். இதற்காகவே நான் அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்கிறேன்.

இந்த பதவி எனக்கு நிரந்தர பதவி அல்ல. அதிகபட்சம் 5 ஆண்டுகள் இருக்கலாம். தலைவர் நினைத்தால் 5 மாதத்தில் கூட போகலாம்.

ஆனால் தலைவராக இருந்து என்ன சாதித்தோம் என்று தொண்டர்கள் சொல்லும்படி இருக்க வேண்டும். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு மாவட்டமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நமது ஒரே குறிக்கோள் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

தமிழகத்தில் சிலருக்கு கட்சி ஆரம்பிப்பதற்குள் முதல்வர் ஆசை வந்து விடுகிறது. சிலர் கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வர் கனவில் உள்ளனர். சீமான் நான் முதல்வராக வருவேன் என்கிறார். அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வந்தது போல பட்ஜெட் வெளியிடுகிறார்.

நான் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து தமிழக அமைச்சராக இருந்துள்ளேன். மக்களவையிலும், நாடாளுமன்றத்திலும் இருந்து மத்திய மந்திரியாகவும் இருந்துள்ளேன். நான் எதிர்கக்கட்சி தலைவராகவும் இருந்து விட்டேன். முதல்- அமைச்சராக மட்டும்தான் இருக்கவில்லை. ஆனால் அந்த தகுதியும் எனக்கு இருக்கிறது. ஆனால் இந்த கட்சிக்கு தகுதி உள்ளதா என்று பார்க்க வேண்டும். அந்த தகுதியை வளர்க்க வேண்டும். அதற்கு தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

ராகுல்காந்தி தமிழ்நாட்டை அதிகம் நேசிக்கிறார். கர்நாடகா தேர்தல் முடிந்ததும் தமிழக கூட்டங்களில் ராகுல் கலந்து கொண்டு பேசுவார். வருகிற ஜூலை முதல் தொகுதி யாத்திரை சென்று மக்களை சந்திக்க திட்டம் தயாரித்துள்ளோம். காங்கிரஸ் தயவில்லாமல் இங்கு யாரும் ஆட்சிக்கு வர முடியாது. மத்தியில் பி.ஜே.பி. அரசை அகற்றும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. வருகிற தேர்தலில் பி.ஜே.பி. அந்த அளவுக்கு பணத்தட்டுபாடு, பெண் குழந்தை கற்பழிப்பு, தலித் தாக்குதல் என்று சம்பவங்கள் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment