சேலம் மாம்பழம் உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடைய மாம்பழங்கள் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற சேலம் மாம்பழங்கள் உலகம் முழுவதும் விற்பனையாகிறது.
சேலம் மார்க்கெட்களுக்கு சேலம் மாவட்டம் வரகம்பாடி, சன்னியாசிகுண்டு, சங்ககிரி, மேட்டூர், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, சோரகை, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, சேர்ந்தமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த மாம்பழங்கள் சேலம் வ.உ.சி. மார்க்கெட், கடை வீதி, பழைய பஸ் நிலையம், அக்ரஹாரம், புதிய பஸ் நிலையம், செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை என மாநகரில் உள்ள பெரும்பாலான பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த வாரத்தை விட தற்போது வரத்து அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ மாம்பழம் 40 ரூபாய் முதல் 130 வரை விற்பனையாகிறது. கடந்த வாரத்தை விட விலை குறைந்துள்ளதால் பொது மக்கள் அதிக அளவில் தற்போது வாங்கி செல்கின்றனர்.
பெங்களூரா, கிளிமூக்கு, செந்தூரா வகை மாம்பழங்கள் 40 ரூபாய்க்கும், இமாம்பசந்த், சேலம் பெங்களூரா வகை பழங்கள் 80 முதல் 130 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.
பங்கனப்பள்ளி 50 முதல் 80 ரூபாய்க்கும், மல்கோவா 80 முதல் 130 வரையும் விற்கப்படுகிறது. இந்த பழங்களை உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் வாங்கி அனுப்பி வருகின்றனர். மல்கோவா, சேலம் பெங்களூரா வகை மாம்பழங்கள் கடந்த வாரம் 180 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த வாரத்தை விட சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழம் வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு மாம்பழம் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.
தற்போது சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வழக்கத்தை விட மாம்பழ வரத்து குறைந்துள்ளது. பருவ நிலை மாற்றத்தால் மாம்பிஞ்சுகள் உதிர்ந்தது தான் காரணம்.
சேலத்தில் உள்ள மாம்பழங்களை உலகம் முழுவதும் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் உறவினர்கள், நண்பர்களுக்கு கொரியர் மூலம் ஏற்கனவே வாங்கி அனுப்பி வருகிறார்கள்.
இந்தாண்டு முதல் சேலம் மாம்பழம் உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே மாம்பழம் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாம்பழம் விற்பனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.