இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டார்.
காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 வயதான எலிசபெத் பேசும் போது காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார் என தெரிவித்தார். சார்லஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராணி எலிசபெத் கோரிக்கை விடுத்தார்.
ராணி எலிசபெத்தின் இந்த கோரிக்கை தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் மோடிக்கு விருந்து அளிக்கிறார்.
இரு நாடுகளின் உறவு குறித்து மோடி – மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அரசுமுறை சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை இரவு நாடு திரும்ப உள்ளார்.