சிவகங்கை, நெல்லை உள்பட 5 மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தஞ்சாவூர் கோர்ட்டில் மாவட்ட முதன்மை அரசு வக்கீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கு விசாரணைக்காக தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதேபோன்று சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
விஜயகாந்த் தரப்பில் மூத்த வக்கீல் எம்.அஜ்மல்கான் ஆஜராகி வாதாடுகையில் ‘எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு விஜயகாந்த் தனது கடமையை செய்துள்ளார். இதை அவதூறாக கருத முடியாது. மனுதாரர் குற்றம் புரிந்துள்ளாரா இல்லையா என்பதை நன்கு ஆராய்ந்து கீழ்கோர்ட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால், கீழ்கோர்ட்டு எந்திரத்தனமாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மனுதாரருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு சம்மன் அனுப்பியது சட்டத்துக்கு புறம்பானது’ என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ராஜரத்தினம், மதுரை ஐகோர்ட்டு கிளை அரசு வக்கீல் அன்பரசன் ஆகியோர், மனுதாரர் தனது தரப்பு வாதத்தை கீழ்க்கோர்ட்டில் தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.
முடிவில், விஜயகாந்த் மீது நெல்லை உள்பட 5 மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளை கீழ்க்கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த வழக்குகளில் விஜயகாந்த் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.