கடந்த 15 ஆண்டுகளில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் அளித்த வாக்குமூலம் ஆணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் தனிப்பிரிவு செயலாளராகவும் தற்போது கலை மற்றும் பண்பாட்டு இயக்ககத்தின் ஆணையராக பணியாற்றி வரும் ராமலிங்கம் ஐஏஎஸ் நேற்று ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி சுமார் 3.30 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார். அப்போது, ஜெயலலிதாவை நீங்கள் பார்த்தீர்களா, எத்தனை முறை பார்த்தீர்கள், நீங்கள் பார்க்கும் போது அவர் மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார், ஜெயலலிதா சுயநினைவுடன் இருக்கும் போது அமைச்சர்கள் யார்,யார் பார்த்தார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அவரது பதிலை நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார்.
பின்னர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறும் போது, ‘இன்று தான் முதல்முறையாக ஆஜராகிறேன். ஜெயலலிதாவை பார்த்தேனா என்பது குறித்து ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன். விசாரணை ஆணையத்தில் எல்லா கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன்’ என்றார். இவர் தன் உறவினர் ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கு தனியாக அரசாணையை பெற்று கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதாவிடம் மிகவும் செல்வாக்கு உள்ளவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கத்திடம் நடத்திய விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: 2016 செப்டம்பர் 22 மற்றும் 27ம் தேதியில் ஜெயலலிதாவை ராமலிங்கம் பார்த்ததாக கூறினார். செப்டம்பர் 23ம் தேதி தனது உடல் நிலை குறித்து விசாரித்த பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா அறிக்கை அனுப்புவதற்காக அவரது கையெழுத்தை பெற வந்ததாக தெரிவித்தார். அப்போது டாக்டர் ஒருவர் தான் என்னிடம் இருந்து அறிக்கை வாங்கி கொண்டு ஜெயலலிதாவிடம் கையெழுத்து பெற்று தந்தார் என்று தெரிவித்தார். நான் ஜெயலலிதா அறை வளாகத்தில் 10 நிமிடம் காத்திருந்தேன். இருப்பினும், ஜெயலலிதாவை பார்க்கவில்லை. அமைச்சர்கள் பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது. 2002 முதல் ஜெயலலிதாவை எனக்கு தெரியும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் நான் சசிகலாவை ஒரு முறை தான் பார்த்தேன். அதுவும், மருத்துவமனை காரிடரில் வைத்து தான் அவரை பார்த்தேன். அதற்கு முன்பு அவரை பார்த்தது கூட கிடையாது என்று தெரிவித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.