கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு !

400 0

மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோடைகாலத்தில் தமிழக மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.

இதில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகிக்கும் பொருட்டு ஊரக பகுதிகளுக்கு ரூ.50 கோடியும், நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு ரூ.120 கோடியும், பேரூராட்சிகளுக்கு ரூ.14 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.16 கோடியும் என மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மழைநீர் சேமிப்பு தொடர்பாகவும், கழிவுநீரை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றி அதை பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்களை தீட்டவும் உத்தரவிட்டார். சென்னை மாநகரை பொறுத்தவரை, குழாய்கள் மூலம் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலம் புதிய திட்டம் தீட்ட உத்தரவு பிறப்பித்தார்.

பிரதம மந்திரியின் ‘பசல் பீமா யோஜனா திட்டம்’ தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பயிர் காப்பீட்டு திட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வேளாண் பெருமக்களுக்கு உடனடியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத்தரவும் கூறினார்.

அரசு செயலாளர் அந்தஸ்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது மாவட்டங்களுக்கு வரும் வாரத்தில் நேரடியாக சென்று குடிநீர் வினியோக நிலையினை கண்காணித்து மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment