கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையொட்டி கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது.
கன்னட அமைப்பினரும் அம்மாநில விவசாய சங்கத்தினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக தமிழகம்-கர்நாடகம் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தமிழக பஸ்கள் செல்வதும் நிறுத்தப்பட்டது.
ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் சத்தியமங்கலத்திலிருந்து திம்பம்-ஆசனூர் மலைப்பதை வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் தமிழக பஸ்கள் 4-வது நாளாக நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்தும் தமிழகத்தை கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் முழு அடைப்பு (வேலை நிறுத்தம்) செய்ய அழைப்பு விடுத்தனர்.
இந்த அமைப்பினர்களும் பல்வேறு கட்சியினரும் கன்னட சங்கத்தினரும் சேர்ந்து முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.இதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. நேற்று வரை கர்நாடக மாநில பஸ்கள் ஈரோடு, கோவை, திருப்பூர், சத்தியமங்கலம் வந்து சென்றது.
ஆனால் இன்று கர்நாடகாவில் பந்த்தையொட்டி கர்நாடக மாநில பஸ்களும் தமிழகத்துக்கு வருவது நிறுத்தப்பட்டன.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தினமும் ஏராளமான லாரிகள், சரக்கு வாகனங்கள் செல்லும். இந்த வழியாக சென்றால் மத்திய பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களும் எளிதில் சென்று விடுவதால் சத்தியமங்கலம் மலைப்பாதை 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் இருக்கும்.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் பந்த்தையொட்டி இன்று சத்தியமங்கலம் மலைப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பு கருதி மலையடிவாரம் உள்ள பண்ணாரி வன சோதனை சாவடியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்ட எல்லையான தாளவாடி வரை தமிழக பஸ்கள் சென்று திரும்பி விடுகின்றன. இதே போல் மற்ற வாகனங்களும் தாளவாடி செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இன்று காலையிலிருந்தே பதட்டம் நிலவியது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள கன்னட கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சொந்த மாவட்டம் சாம்ராஜ் நகர் என்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. சாம்ராஜ் நகரில் தமிழர்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் கடைகள் வைத்து உள்ளனர்.
இதையொட்டி சாம்ராஜ் நகர் மாவட்டம் முழுவதும் பெங்களூருக்கு அடுத்தப்படியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைகள் யாவும் அடைக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது.
தமிழர்களின் கடைகள், நிறுவனம் மீது தாக்குதல் நடந்து விடக்கூடாது என கருதி அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.சாம்ராஜ் நகரில் உள்ள பதட்ட நிலை ஈரோடு மாவட்ட கர்நாடக எல்லையான தாளவாடியிலும் நிலவி வருகிறது.இதையொட்டி தாளவாடியில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.