தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பால்-தயிர், காய்கறிகளை ஆய்வு

436 0

201609091044472878_tn-milk-curd-vegetables-kerala-officials-to-inspect_secvpfகேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது தரமான பால் மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 13-ந் தேதி வரை சிறப்பு முகாமில் பால் பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்று கேரள அதிகாரி கூறினார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்திலிருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பால் மற்றும் தயிர் ஆகியவை தரமானதாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய கேரள அரசு பொள்ளாச்சி மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வுக்கூடம் அமைத்துள்ளது.

தமிழக எல்லையிலிருந்து கேரளா நோக்கி செல்லும் பால் வண்டிகளை நிறுத்தி மாதிரி பால் எடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மீனாட்சிபுரத்தில் உள்ள தரச் சோதனை அலுவலகத்தில் தீவிரமாக கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வில் அரசு நிர்ணயித்துள்ள புரதம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உரிய அளவில் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு தரம் சரி என்று வந்த பின்னரே கேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதுவரை சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் மற்றும் 16 ஆயிரம் லிட்டர் தயிர் ஆகியவை பரிசோதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து பாலக்காடு மாவட்ட தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜெய சுஜீஸ் கூறியதாவது:-

கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது பால் தேவை அதிகரிக்கும். அப்போது தரமான பால் மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 13-ந் தேதி வரை சிறப்பு முகாமில் பால் பரிசோதனை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதுவரை 156 மாதிரிகள் எடுக்கப்பட்டு 3½ லட்சம் லிட்டர் பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 500 லிட்டர் தயிர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது செய்யப்பட்ட ஆய்வில் கலப்படம் எதுவும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.