அக்கரப்பத்தனை பசுமலை ஊட்டுவள்ளி தோட்டப்பிரிவான பெங்கட்டன் சின்ன தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், வீதிக்கு இறங்கி கூடாரம் அமைத்து போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
பெங்கட்டன் தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக கிராம மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் 71 தனிவீடுகள் அமைக்கப்பட்டு 2017.02.09 அன்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த 71 வீடுகளை பயனாளிகளுக்கு முறையாக வீட்டு உறுதி பத்திரங்களுடன் கையளிக்கும் நிகழ்வும் கூட தலவாக்கலை நகரசபை மைதானத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது.
இது இவ்வாறிருக்க குறித்த பெங்கட்டன் தோட்டத்தை முழுமையான கிராமமாக மாற்றியமைக்கும் நோக்குடனே இந்த தனிவீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இருந்தும் இந்த தோட்டத்தில் மேலும் 84 குடும்பங்களுக்கு தனிவீடுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த வீடுகளை அமைக்க வழங்கப்பட்ட 71 வீடுகளில் தங்கியிருந்த குடும்பத்தார்கள் நீண்டகாலமாக வசித்து வந்த லயன் வீடுகளை உடைக்க வேண்டிய நிலையுள்ளது.
காரணம் மேலதிக வீடுகளை அமைக்க அத்தோட்டத்தில் மேலும் தேயிலை காணிகளை பெற்றுகொள்ள தயக்கம் காட்டப்பட்டுள்ளது.
ஆகையால், புதிய வீடுகளை பெற்று சென்ற குடும்பங்கள் வசித்த லயன் அறைகளை உடைத்து அவ்விடத்தில் புதிய வீடுகளை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் புதிய வீடுகளை உறுதிபத்திரங்களுடன் பெற்றுக்கொண்டுள்ள அத்தோட்டத்தின் இலக்கம் ஒன்று லயத்தில் வசித்துவந்த 24 குடும்பங்களில் 8 குடும்பங்கள் லயத்து வீட்டிலிருந்து அகன்று செல்ல தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் லயத்தினை உடைத்து அவ்விடத்தில் புதிய தனிவீடுகளை அமைக்க தடை ஏற்பட்டுள்ளது.
இவர்களை இந்த வீடுகளில் இருந்து அகற்றி அவர்களுக்கு வழங்கியுள்ள புதிய வீடுகளுக்கு செல்ல அழுத்தம் கொடுத்துள்ள தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் இவர்களுக்கு எதிராகவும் மேலும் இந்த தோட்டத்தில் கட்டப்படவேண்டிய 84 வீடுகளை கட்ட வழியுருத்தியும் பணிபகிஸ்கரிப்புடன் போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணிபகிஷ்கரிப்பிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் டயகம, தலவாக்கலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள பெங்கட்டன் தோட்ட கொழுந்து மடுவத்தில் அமர்ந்து தோட்டத்தின் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், தோட்ட நிர்வாகம் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என காலை 11 மணியளவில் தமது ஆர்பாட்டத்தை கைவிட்டு சென்றுள்ள தொழிலாளர்கள் நிர்வாகம் உடனடி தீர்வை எட்டாவிடின் தொடர்ந்தும் ஆர்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.