வவுனியா வடக்கு பிரதேசசபை உப தவிசாளர் தெரிவின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு, இன்று காலை உள்@ராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.
சபை அமர்வில் அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தவிசாளர் தெரிவுக்காக 2 உறுப்பினர்கள் போட்டியிட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ச.தணிகாசலம் 11 வாக்குகளை பெற்றார்.
தணிகாசலத்திற்கு அவரது கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர். தவிசாளர் தெரிவின்போது தமிழர் விடுதலை கூட்டணியின் ஜெ.ஜெயரூபன் 11 வாக்குகளை பெற்றார்.
ஜெயரூபனுக்கு அவரது கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
பின்னர் திருவுள சீட்டு மூலம் தமிழ் கூட்டமைப்பின் ச.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவில் மூவர் போட்டியிட்டிருந்தனர்.
தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வன், பொதுஜன பெரமுன சார்பில் க.விக்கிரமபால, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா ஆகியோர் போட்டியிட்டிருந்த நிலையில், தமிழர் விடுதலை கூட்டணியின் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜா 14 வாக்குகள் பெற்றார். அவருக்கு கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
இதனையடுத்து கா.விக்கிரமபால 6 வாக்குகளைப் பெற்றார்.
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜா உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
முன்னர் தவிசாளர் தெரிவிலே நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தது.
இதேவேளை, உப தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலைமை வகித்தனர்.