“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

572 0

prabahakaranபுதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன  தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்ட  நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்ட 45 நிமிட யுத்தத்தில் 53வது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவே தலைமை தாங்கினார். 30 ஆண்டுகால யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மேஜர் ஜெனரல் குணரத்னவால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்லி  பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்திற்கு மேஜர் ஜெனரல் குணரத்ன வழங்கிய நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமுள்ள ஓர் அமைப்பாக வளர்வதற்கு வழிவகுத்த வரலாற்று சார் தோல்விகள், போர் நினைவுகளை எழுதுவதற்குத் தன்னைத் தூண்டிய காரணிகள், புலிகள் அமைப்பின் வீழ்ச்சி,  சிறிலங்கா இராணுவமானது வெற்றி பெற்ற இராணுவமாக மாறியமை, மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்த களம் போன்ற பல்வேறு விடயங்களை விபரித்துள்ளார்.

‘விடுதலைப் புலிகளிடம் தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களுக்காகவும், கொழும்பு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர்கள், எமது இராணுவ வீரர்கள் மற்றும் யுத்தம் தொடர்பாகத் தவறான கருத்துக்களால் வழிநடாத்தப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களுக்காகவே நான் இந்த நூலை எழுதியுள்ளேன்’ என குணரத்ன குறிப்பிட்டார். தான் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தன்னுடனேயே இவ்வாறான யுத்த நினைவுகள் புதைக்கப்படுவதைத் தான் விரும்பவில்லை எனவும் குணரத்ன தெரிவித்தார்.

தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவரும், ஒழுக்கமுள்ள தலைவரும், பயங்கரவாதிகளின் தலைவருமான பிரபாகரன் போன்ற ஒருவர் உருவாகும் போது மட்டுமே புலிகள் அமைப்பானது மீளவும் செயற்பட முடியும் என மேஜர்ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இவர் வழங்கிய நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: புலிகள் அமைப்புத் தோற்கடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலின் மூலம் தங்களது யுத்த நினைவுகளைப் பதிவு செய்தமைக்கான காரணம் என்ன?

பதில்: புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதென்பது இறுதி யுத்தத்தின் போது பல்வேறு தியாகங்களைப் புரிந்த எமது இராணுவ வீரர்களுக்கு மிகவும் கடினமான பணியாக இருந்தது. 19 மே 2009ல் முடிவிற்கு வந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களாகத் தொடர்ந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 5600 இற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் பலியாகினார். இன்னும் பல ஆயிரம் வரையான இராணுவ வீரர்கள் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் மேலும் குண்டுச்சத்தங்கள் மற்றும் உயிரழிவுகள் எதுவுமின்றிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காகத் தாம் பல்வேறு அர்ப்பணிப்புக்களைப் புரிந்துள்ளதை எண்ணி இன்று இராணுவ வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

Maj.Gen.Kamal Gunaratne

சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தாம் கடந்த கால யுத்தத்தின் போது அனுபவித்த குருதி தோய்ந்த அழிவுகளையும் புலிகள் அமைப்புடனான யுத்தத்தையும் மறந்து வாழும் நிலையில் உள்ளனர். கெட்டவாய்ப்பாக, 30 ஆண்டுகால யுத்தத்தின் போது பயங்கரவாதத்தால் தாம் எவ்வாறு துன்பப்பட்டோம் இந்த யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக சிறிலங்கா இராணுவ வீரர்கள் எத்தகைய தியாகத்தைப் புரிந்தார்கள் என்பது தொடர்பாகவும் மக்கள் மறக்கின்றனர்.

நான் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் அல்ல. ஆனால் 1983 தொடக்கம் 2009 மே வரை யுத்த களத்தில் பணியாற்றிய ஒரு வீரன் என்ற வகையில் அதில் நான் பெற்றுக் கொண்ட அனுபவத்தை இங்கு பதிவு செய்கிறேன். நாங்கள் அதாவது பாதுகாப்புப் படையினர் என்ன செய்தனர் என்பதைப் பதிவு செய்வதற்காகவே அன்றி நான் அதாவது கமல் குணரத்ன என்கின்ற தனிப்பட்ட நபர் எதனைச் செய்தார் என்பதைப் பதிவு செய்வது எனது நோக்கல்ல. புலிகள் அமைப்பின் பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவித்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்புப் படையினர் எதனைச் செய்தனர் என்பதைப் பதிவு செய்வதே எனது நோக்காகும்.

கேள்வி: 800 பக்க நூல் ஒன்றை எழுதுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இராணுவத்தில் இருந்தவாறு, தங்களது அனுபவங்களை நூலாக எழுதுவதற்கான நேரத்தை நீங்கள் எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்?

பதில்: ஆம், இது மிகவும் கடினமான பணியாகும். நான் எனது ஓய்வு நேரத்தை இந்த நூலை எழுதுவதில் செலவிட்டேன். போர் தொடர்பாக எழுதப்பட்டுள்ள பெரும்பாலான நூல்கள் போரில் பங்குபற்றாதவர்களாலேயே எழுதப்பட்டுள்ளன. நான் யுத்தத்தின் போது பெற்றுக்கொண்ட உண்மையான அனுபவங்களை இதில் பதிவு செய்துள்ளேன். நான் இந்த நூலை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் இது மிகவும் இலகுவான காரியம் என நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு பக்கமாக எழுதிய போது தான் இது எவ்வளவு கடினமான பணி என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் நான் எனது முயற்சியைக் கைவிடவில்லை. எழுத்தாளர் ஒருவர் தனது நூலை நிறைவு செய்வதற்கு கிரகித்தல், பொறுமை மற்றும் விடாமுயற்சி போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் அந்த நூல் முற்றுப்பெறாது பாதியிலேயே நின்றுவிடும்.

கேள்வி: நீங்கள் இந்த நூலை சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியமைக்கான காரணம் என்ன?

பதில்: போரில் இறுதிவரை நிலைத்து நின்றவரே உண்மையான வெற்றியாளர் ஆவார். சிறிலங்கா இராணுவமானது ஈழப்போரில் நிலைத்து நின்றது. இதனால் இதில் வெற்றி பெற்றது. ஆனால் பிரபாகரனால் நிலைத்து நிற்க முடியவில்லை. இராணுவத்தில் தமது பிள்ளைகளை இணைத்துக் கொண்ட கிராமத்துப் பெற்றோர்களின் ஆசிகளை நாம் பெற்றிருந்தமையே எமது வெற்றிக்குக் காரணமாகும்.

மக்களிடம் பெற்றுக் கொண்ட ஆதரவும் மனிதவலுவுமே சிறிலங்கா இராணுவமானது இறுதி யுத்தத்தில் நிலைத்து நிற்கக் காரணமாகும். ஆனால் பிரபாகரன் தனது மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. ஆகவே இந்தப் பெற்றோர்களுக்காகவும் அவர்களது உறவுகள் மற்றும் இராணுவ வீரர்கள், யுத்தத்தில் உயிர்நீத்த வீரர்களுக்காகவும் இந்த நூலை நான் சிங்களத்தில் எழுதியுள்ளேன். இதன்மூலம் இவர்கள் தமது சொந்த மொழியில் இந்த நூலை வாசிக்க முடியும். தமது பிள்ளைகள் எவ்வாறு யுத்தத்தில் பங்குகொண்டு போராடினார்கள் அவர்கள் இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக என்ன செய்தனர் என்பதை இந்த மக்கள் வாசித்தறிய முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதுகாப்புப் படையினரால் பல்வேறு போர்க் குற்றங்கள் மற்றும் மீறல்கள் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிராகவே ஆங்கிலத்தில் இந்த நூலை மொழிபெயர்ப்பதென நான் தீர்மானித்தேன். பாதுகாப்புப் படையினர் தொடர்பாக எமது நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழ் சமூகத்தினர் உண்மை என்ன என்பதை அறிவதற்காகவும் இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது உண்மையில் என்ன நடந்தது மற்றும் அது எவ்வளவு கடினமானது என்பதையும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய இடம்பெயர்ந்த மக்களை நாங்கள் எவ்வளவு தூரம் மனிதாபிமானத்துடன் வரவேற்றோம் என்பதையும் ஏனைய சமூகத்தினருக்குத் தெரியப்படுத்த நான் விரும்பினேன்.

கேள்வி: இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போரில் நீங்கள் பங்குபற்றியவர் என்ற வகையில் அவற்றை நீங்கள் எவ்வாறு நினைவுகூற விரும்புகிறீர்கள்?

பதில்: அந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் 50 இராணுவ வீரர்களைக் கொன்ற போதிலும் கூட மக்கள் எவரும் அவர்கள் மீது கோபங்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். ஆனால் அக்காலப்பகுதியில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டத்தில் தோல்வியுறும் போது மட்டும் முழு நாடுமே துக்கம் கொண்டாடியது.  தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தினர் யுத்த களங்களில் தோல்வியுற்ற போது மக்கள் இராணுவத்தினர் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பங்களில் புலிகள் அமைப்பானது போரில் எம்மை விடப் பலம் பொருந்தியவர்கள் என மக்கள் கருதினர். ஆனையிறவை விடுவிப்பதற்கான பலவேகய நடவடிக்கை மற்றும் யாழ்ப்பாணக் கோட்டையை மீட்பதற்கான திரிவிடபாலய போன்ற சில இராணுவ நடவடிக்கைகள் தவிர பெரும்பாலான இராணுவ நடவடிக்கைகளில் பெரும் இழப்புக்களுடன் நாங்கள் தோல்வியுற்றதால் மக்கள் எம்மீது நம்பிக்கை கொள்ளவில்லை.

road-to-nandikalஇரண்டரை ஆண்டுகளாக நாங்கள் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தனர். நாங்கள் மாங்குளத்தை அடைந்த போதிலும் எம்மீது புலிகள் சராமாரியாகத் தாக்குதல் நடாத்தியதால் எங்களால் எமது நிலைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் நாங்கள் வெறும் இரண்டரை நாட்களில் மீண்டும் தாண்டிக்குளம் நோக்கி ஓடவேண்டியேற்பட்டது. ஏனெனில் போரிடுவதற்கும் கைப்பற்றிய நிலைகளைத் தக்கவைத்திருப்பதற்குமான ஆளணிப் பற்றாக்குறையே காரணமாகும். ஓமந்தையில் நாங்கள் எமது நிலைகளைப் பலப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த அப்போதைய கேணல் தர அதிகாரி றொசான் சில்வாவிற்கு நன்றிகள்.

அந்த நாட்களில் நாங்கள் ‘;ஓட்டமெடுத்த இராணுவமாகவே” இருந்தோம். இவ்வாறு பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த எமது இராணுவத்தினர் நான்காம் கட்ட ஈழப்போரில் எவ்வாறு வெற்றியை ஈட்டித் தரும் இராணுவமாக வளர்ச்சியடைந்தது என்பதை நான் எனது நூலில் கூற முயற்சித்துள்ளேன்.

கேள்வி: இவ்வாறான சண்டைக்களங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் தோல்வியுற்றமைக்கான காரணங்கள் என்ன?

பதில்: இதற்கான காரணங்களை நான் எனது நூலில் விபரித்துள்ளேன். 1983 தொடக்கம் 2005 வரை ஒரு தெளிவான அரசியல் நோக்கம் இல்லாமிலிருந்தமையும் பயங்கரவாதத்தைத் தோற்டிப்பதற்கான உறுதியையும் கொண்டிராதமையுமே இதற்கான முக்கிய காரணமாகும்.

மூன்றாவதாக, இராணுவத்தின் போரிடும் பலத்தை அதிகரிப்பதற்கான எந்தவொரு திட்டங்களும் இன்மையும் தொடர்ச்சியான ஆயுத வளங்கள் இன்மையுமே எமது இராணுவமானது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களில் பெரும்பாலான யுத்த களங்களில் தோல்வியுற்றமைக்கான காரணங்களாகும்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நன்கு திட்டமிடப்பட்ட வடமராட்சி இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லாததால் இறுதியில் இடைநடுவில் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவதற்கான தேசிய மூலோபாயம் காணப்படாமை, எம்மீது புலிகள் தாக்குதல் நடத்திய அதேவேளையிலும் முன்னைய அரசாங்கங்கள் தொடர்ந்தும் பேச்சுக்களை மேற்கொண்டமையும் இவ்வாறான தோல்விகளுக்குக் காரணமாகும். சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த போது, எம்மிடம் ஆட்பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் அவை கருத்திலெடுக்கப்படாது யுத்தத்தை முன்னெடுக்குமாறு முன்னைய அரசாங்கங்கள் கட்டளையிட்டன. போரில் எமது வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்த வேளையிலும், தொடர்ந்தும் போரிடுமாறு எமக்கு அதிகாரிகள் கட்டளையிட்டனர்.

பல்வேறு மட்டங்களிலும் இருந்த தலைமைத்துவத்திற்கு யுத்த களச் சாதனைகள் மற்றும் யுத்தகளத் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாமையும் எமது நடவடிக்கைகள் தோல்வியுறக் காரணமாக இருந்தன. இராணுவ அதிகாரிகள் திறன்கள் கருத்திலெடுக்கப்படாது பதவிகள் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக இராணுவத்தில் மூத்த நிலையில் இருப்பவர் ஒருவர் டிவிசனுக்கான கட்டளை அதிகாரியாக பதவி வகிக்கும் நிலை காணப்பட்டது. உண்மையில் கட்டளைகளை வழங்கக்கூடிய திறன்களைக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் ஆளுமைகளுக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் யுத்த களத்தில் தோல்வியுற்றோம்.

படையினர் பிழையான முறையில் போர்க்களங்களுக்கு அனுப்பப்பட்டனர். எடுத்துக்காட்டாக, கட்டளை அதிகாரிகள் மற்றும் சிறப்புப் படையினர் மிக இலகுவாக காலாற்படைகளால் வென்றெடுக்கக் கூடிய சண்டைக்களங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையானது மாங்குளத்தில் இடம்பெற்ற போது 90 கொமாண்டோக்களை உள்ளடக்கிய இரண்டாம் கொமாண்டோப் படையணி முழுமையாக போர்க்களத்தில் நிறுத்தப்பட்டதால் இவர்கள் முற்றாக அழிவைச் சந்திக்க வேண்டிய நிலையேற்பட்டது. இந்த யுத்த களத்தை காலாற்படையினர் மிக இலகுவாக நடாத்திச் சென்றிருக்க முடியும். ஆகவே திறமையற்ற இராணுவத் தலைமைத்துவத்தின் திட்டமிடலின்மையே இவ்வாறான தோல்விக்குக் காரணமாகும்.

கேள்வி: முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதிகளின் தீர்மானங்களை நீங்கள் தவறு எனக் கூறுகிறீர்களா?

பதில்: இல்லை. நான் அவ்வாறு கூறவில்லை. சிறிலங்கா இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய அனைத்துத் தளபதிகள் மீதும் நான் அளவுகடந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவர்கள் இராணுவத்திற்காகத் தம்மை  அர்ப்பணித்துள்ளனர். ஆனால் சரியான தீர்மானம் எடுத்தல் என்கின்ற விடயத்தில் இவர்கள் துல்லியமான தீர்மானத்தை எடுக்காது விட்டிருக்கலாம். அதாவது சரியான தருணத்தில் எடுத்திருக்க வேண்டிய தீர்மானத்தை இவர்கள் எடுக்கவில்லை எனக் கூறுகிறேன்.

கேள்வி: சமாதான காலத்தில் புலிகள் அமைப்பின் நடத்தை எவ்வாறாக இருந்தது?

பதில்: எமக்குள்ளேயே பல்வேறு புகழைக் கொண்டுள்ளோம் என்பது வீரர்களாகிய எமக்குப் பெருமையாகும். பெருமைக்குரிய வீரர்கள் அடிக்கடி குழப்பத்திற்கு உட்படும் போது அதனைச் சகித்துக் கொள்வதென்பது மிகவும் கடினமானதாகும். ஆனால் எமது வீரர்கள் சமாதான காலத்தில் தமது கடமைகளை மிகவும் பொறுமையுடன் மேற்கொண்டனர். புலிகள் அமைப்பின் உள்நோக்கத்தை அறியாத எமது அரசாங்கத் தலைவர்கள் புலிகள் எப்போதெல்லாம் சமாதானப் பேச்சுக்களுக்குத் தயாராகின்ற போதெல்லாம் அதற்கு சம்மதித்தார்கள். புலிகள் சிறிலங்கா அரசாங்கத்துடன் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பேச்சுக்களை மேற்கொள்ளும் அதேவேளையில் அவற்றை முறித்துக் கொண்டு எமது வீரர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர்.

சமாதான காலத்தில் எமது வீரர்களை எவ்வாறு புலிகள் குழப்பினர் என்பதை நான் எனது நூலில் விளக்கியுள்ளேன். புலிகளின் ஏற்பாட்டில் இராணுவத்தினரின் முகாங்களின் முன்னால் கிராம மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் எமது வீரர்கள் தொடர்ந்தும் பொறுமை காத்தனர்.

குழப்பமான சமாதான நடவடிக்கையை விட கௌரவமான வகையில் யுத்தம் ஒன்றை நடாத்துவதென நாங்கள் தீர்மானித்தோம். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கினர். எமக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. எமது பலவீனங்கள் கண்டறியப்பட்டன. நாங்கள் எமது பலவீனங்களைக் களைந்து எமது பலங்களை மேலும் முன்னேற்றினோம். இரவு வேளைகளில் எம்மீது புலிகள் தாக்குதல் நடாத்தி எமது வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினர். நாங்கள் இதனை முறியடிப்பதற்காக எமது வீரர்களுக்கு இரவில் பயிற்சிகளை வழங்கினோம். இறுதியாக இவர்கள் சிறப்பான இரவு நேரப் போர் வீரர்களாகவும் மாறினர்.

சிறிலங்கா இராணுவத்தினர் மேலும் பலம்பெற்ற பின்னர், நாங்கள் நான்காம் கட்ட ஈழப்போரை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமானது எப்போது வாய்ப்பை வழங்கும் எனக் காத்திருந்தோம். புலிகளும் எம்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடுவார்கள் என்பது எமக்குத் தெரியும்.

கேள்வி: ‘ஓட்டமெடுத்த இராணுவத்தில்’ நீங்கள் போரிட்டபோது புலிகள் அமைப்பு மற்றும் பிரபாகரன் தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்னவாக இருந்தது?

பதில்: ஓட்டமெடுத்த இராணுவம் எனக் கூறுவது கசப்பான உண்மை எனினும், இராணுவத்தில் கடமையாற்றிய பல மூத்த இராணுவ அதிகாரிகள் இதனை மறுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இரண்டரை நாட்களில் நாங்கள் தாண்டிக்குளத்திற்கு ஓட்டமெடுத்ததிலிருந்து இதனை நான் ‘ஓட்டம்பிடித்த இராணுவம் எனக் கூறவிரும்பினேன். கடந்த காலத்தில் நாங்கள் எவ்வாறு யுத்தம் புரிந்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு இவ்வாறான பிழையான அல்லது தவறான சொல்லைப் பிரயோகித்தமைக்கு நான் மன்னிப்புக் கோருகிறேன். தோல்வியடையும் இராணுவத்திற்கு கட்டளை வழங்கத் தான் விரும்பவில்லை எனக் கூறியே முன்னால் இராணுவக் கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் சிசில் வைத்தியரட்ன ஓய்வுபெற்றிருந்தார். சிறிலங்கா இராணுவத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு அவர் தன்னாலான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதில் அவர் தோல்வியடைந்தார்.

எனினும் இறுதியாக இடம்பெற்ற ஈழப்போரில் இராணுவத்தினர் வெற்றி பெறும் வரை இவர்கள் போரை வெற்றி கொள்வார்கள் என மக்கள் நினைக்கவில்லை. ‘புலிகள் அமைப்புடனான யுத்தத்தை உங்களால் வெற்றி கொள்ள முடியாது’ என சமாதான காலத்தில் முன்னாள் அரசாங்கத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருந்தார். இல்லை எங்களால் போரை வெற்றி கொள்ள முடியும் என நான் பதிலளித்தேன். ‘கேணல், நீண்ட காலமாக உங்களது வீரர்கள் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு யுத்த களத்தில் கூட உங்களால் அவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இதன்காரணமாகவே நாங்கள் சமாதானப் பேச்சுக்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது’ குறித்த அமைச்சர் என்னிடம் கூறியிருந்தார். இதனை நான் எனது நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

புலிகள் தான் மிகப் பலமான போர்ப் படையைக் கொண்டிருப்பதாக இந்த நாட்டு மக்களும், அரசாங்கங்களும் எமது இராணுவ வீரர்களும் நினைத்தனர். ஆனால் 2009ல் நாங்கள் இந்தக் கருத்தியலை மாற்றிக் காட்டினோம். தன்னை அர்ப்பணித்த, தியாகம் செய்த, ஒழுக்கமுள்ள ஒரு பயங்கரவாதத் தலைவரான பிரபாகரன் போன்ற இன்னொரு தலைவர் உருவாகும் வரை புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும் என நான் கருதவில்லை.

prabahakaranபிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தைப் பேணினார். பிரபாகரன் தான் தற்கொலைத் தாக்குதல் கலையை முதலில் கட்டியமைத்திருந்தார். அல்குவைதாவின் முதலாவது தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். சிறிலங்கா இராணுவத்தினர், பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும் விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும் 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்.

ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்வதன் மூலம் இந்தியா முழுமையாகவும் உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.

செவ்விகண்டவர் –  Shanika Sriyananda
வழிமூலம்            –   Daily FT
மொழியாக்கம் நித்தியபாரதி