தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டை வீதிகளில் கொண்டாட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி பாற்சோறு உண்டு மகிழ்ந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நிலமீட்புக்காக போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்று (14) 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 400 நாட்களைத் தாண்டி வீதிகளில் போராடி வருகின்றனர்.
அவர்கள் இன்று சித்திரைப் புத்தாண்டை தெருக்களில் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (14) இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்குபற்றியுள்ளார்.
இதன்போது பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி , கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார். சுபநேரத்தில் அங்கு விருந்துபசாரமும் நடைபெற்றது.
இவ் வைபவங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்குபற்றியிருந்த புகைப்படங்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.