அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அமல்படுத்த ரூ.1,652 கோடி நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2016-17-ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில், அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ரூ.3,523 கோடி திட்டப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பி, பிரதமரின் கிரிஷி சிஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி கோரப்பட்டது.
2017-18-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், அத்திக்கடவு-அவினாசி பாசனம், நிலத்தடி நீர் உயர்வு மற்றும் குடிநீர் வினியோக திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்தத் திட்டம் நீர் மேலேற்றுத்திட்டமாக செயல்படுத்தப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் ரூ.1,850 கோடிக்கான அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை நீராதாரத் துறையின் தலைமைப் பொறியாளர் அரசுக்கு அனுப்பிவைத்தார். இதில், பவானி ஆற்றின் உபரிநீரை காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து குழாய்கள் மூலம் மேலேற்றும் பணி அடங்குகிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வறட்சிப்பகுதிக்கு பாசன வசதிகளை செய்துகொடுப்பது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். 74 ஏரிகள், 971 குளங்களுக்கு நீர் சப்ளை செய்வதோடு, அதன்மூலம் நீர்மட்டத்தை உயர்த்தி பாசனத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இந்தத் திட்டம் மூலம் 24,468 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த திட்டத்துக்கு ரூ.1,850 கோடியும், 30 மெகாவாட் சூரியஒளி மின்சாரத்தை பெறும் திட்டத்துக்காக ரூ.137 கோடியும் செலவாகிறது.
இதனை அரசு பரிசீலித்து, சூரிய மின்சார திட்டத்துக்கான தொகைக்கு நபார்டு உதவி பெறவும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அமல்படுத்துவதற்காக ரூ.1,652 கோடிக்கு நிர்வாக ஒப்புதலையும் அரசு வழங்கி உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.