எதிர்வரும் மே 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவும், கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து மக்கள் ஆணையைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பக்கத்தஹேவா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்பும் கருத்துத் தெரிவித்த அவர்;
கூடிய விரைவில் எமது கட்சியின் செயற்குழுவைக் கூட்டி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான யோசனையை நிறைவேற்றவுள்ளோம்,
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு எதிராக 122 வாக்குகளைப் பெற்றுள்ளது, எனவே அவர்களுக்கு அரசாங்கத்தை முன்னெடுக்க நாம் சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன்போது, “கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாரா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி. திஸாநாயக்க ” அவர்கள் எமது இரத்த உறவுகள், அவர்களைக் கைவிட்டு நாம் எதனையும் சிந்திக்கமாட்டோம்.” எனத் தெரிவித்தார்.
“எதிர்வரும் தேர்தலில் ராஜபக்ஷ ஒருவர் போட்டியிட முன்வந்தால் என்ன செய்வது” என மற்றுமொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது, ” அது தொடர்பில் எமக்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லை” எனப் பதிலளித்தார்.