10,800 கிலோ தடைசெய்யப்பட்ட உரம் இறக்குமதி – சுங்க பிரிவு தீவிர விசாரணை

5703 0

டொலமைட் உரம் என அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்ட கிளைபோசெர்ட் உரத் தொகை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வேளையில் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி  சுங்க தடுப்பு வாயில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 40 அடி நீளமான கொள்கலனானது இன்று ஒருகொடவத்தை சுங்க கொள்கலன் தரிப்பு நிலையத்தில் வைத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

டொலமைட் உரம் என அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்ட கிளைபோசெர்ட் உரத் தொகையொன்று சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 934 பொதிகளில் 28000 கிலோ நிறையுடைய டொலமைட் உரம் இறக்குமதி செய்யப்படுவதாக அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ள நிலையில் இதனுள்  கிளைபோசெர்ட் ஒரு தொகையும் கண்டறியப்படாத இரசாயன கனிமங்கள் ஒருதொகையுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது இக் கொள்கலனில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான, 10,800 கிலோ நிறையுடைய கிளைபோசெர்ட்டும், 3 இலட்சம் ரூபா பெறுமதியான  17000 கிலோ நிறையுடைய டொலமைட்டும் 200 கிலோ நிறையுடைய இதுவரையில் கண்டறியப்படாத இரசாயன கனிமங்கள் ஒருதொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவிலிருந்து கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை முகவர் ஒருவரே இதனை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று வரையில் இவ்விறக்குமதியுடன் தொடர்புடைய இரண்டு துறைமுக எழுதுவினைஞர்கள் இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுங்க பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்படாத இரசாயன கனிமங்கள் குறித்து இரசாயன பரிசோதனை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment