பொறியியல் படிப்பில் சேர மே முதல் வாரம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளாக இருந்தால் அந்தகல்லூரியில் சேர இருக்கும் இடங்களில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடவேண்டும். இந்த இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படும். மீதம் உள்ள 35 சதவீத இடங்களுக்கு கல்லூரிகளே மாணவர்களை சேர்த்துக்கொள்ளாலாம். இந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.
சிறுபான்மை கல்லூரிகளாக இருந்தால் 50 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கொடுக்கவேண்டும். மீதம் உள்ள 50 சதவீத இடங்களில் மாணவர்களை கல்லூரிகளே சேர்த்துக்கொள்ளலாம். இவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.
கடந்த பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை அண்ணாபல் கலைக்கழகத்தில் நடத்தியது. மாணவர்கள் வெகு தூரம் வரவேண்டி உள்ளது என்று கருதி இந்த ஆண்டு (2018-2019) ஆன்லைன் மூலம் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
ஆன்லைன் மூலம் இணையதளத்தில் (www.annauniv.edu) விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம். ஆன்லைனில் எங்கிருந்தாலும் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் போது ‘யூசர் ஐ.டி.’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ கேட்கும்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 42 மையங்களை அமைத்துள்ளது. அந்த மையங்களில் ஆன்லைன் இலவசம். மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் இல்லாமல் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறை தரும் மதிப்பெண் சி.டி.யைக்கொண்டு மாணவ-மாணவிகளின் விண்ணப்பத்தில் தாங்களே பதிந்து கொள்வோம்.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மட்டும் மதிப்பெண்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு அன்று நடைபெற்றது.
இந்த வருடம் முதல் 42 மையங்களிலும் கலந்தாய்வுக்கு முன்பாகவே சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். அப்போது கலந்தாய்வு குறித்த வீடியோ 3 முறை காண்பிக்கப்படும்.
பின்னர் ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வின் போது முதலில் ரேங்க் பட்டியலில் உள்ளபடிதான் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் அழைக்கப்படுவார்கள்.
மாணவர்கள் தங்கள் விருப்பத்தை பல கலந்தாய்வின்போது பதிவு செய்யலாம். அவர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகு அண்ணாபல்கலைக்கழகம் அவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கும். ஒதுக்கிய கல்லூரி பிடித்திருக்கிறது என்றால் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விருப்பம் தெரிவிக்கவேண்டும். இல்லை என்றால் 2-வது சுற்றுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
விளையாட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும், தொழில் கல்வி மாணவர்களுக்கும் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு கிடையாது.
பொறியியல் கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றார்.