தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி கூறி இருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “தமிழ்ப் புத்தாண்டு” திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ்க்குடிமக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் மக்களின் உளப்பூர்வ விருப்பத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாள் என்ற உரிமையை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் புரட்சித் தலைவி அம்மா.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இனிய புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.