கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை நகருக்கு ரெட்டேரியில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் பொது மக்களுக்கு புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகள் மூலம் தினசரி 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 4,240 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவில் 38 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.
மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வருகையும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க ரெட்டேரியில் உள்ள தண்ணீரை எடுத்து குடிநீர் சப்ளைக்கு உபயோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெட்டேரி தண்ணீர் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் சென்னை மக்களுக்கு ரெட்டேரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க திருவள்ளூர் அருகே கிணறுகள், போர் வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை எடுத்து சுத்தி கரித்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வருகிற கோடை காலத்தில் சென்னை மாநகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இந்த ஆண்டு ஏற்படாத வகையில் புதிதாக ரெட்டேரியில் உள்ள தண்ணீரை எடுத்து சுத்திகரித்து குடிநீர் குழாய் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்கான பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த மாதம் முதல் ரெட்டேரி தண்ணீர் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும். மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது. பொது மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.