திருச்சியில் இன்று காவிரி ஆற்றில் இறங்கி ஏர் உழுது கமல் கட்சியினர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியிலும் தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு வீர விளையாட்டு கழகத்தினர் மற்றும் மாணவர்கள், விவசாயிகள் பலரும் பங்கேற்றனர். அப்போது ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஏர் உழுவதற்கான காளை மாடுகளையும் அழைத்து வந்திருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக நின்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து ஏர் கலப்பையில் மாடுகளை பூட்டி காவிரி ஆற்றில் உழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதுபற்றி ஜல்லிக்கட்டு விளையாட்டு மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறும்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் இறந்து வருகின்றன. இப்படியே சென்றால் தமிகம் விரைவில் பாலைவனமாக மாறிவிடும். இதனை கருத்தில் கொண்டே இன்று காவிரி ஆற்றில் ஏர் உழுது போராட்டம் நடத்தினோம்.
ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் நடந்த மெரினா புரட்சி போல் காவிரிக்காக பெரும் புரட்சி வெடிக்கும். திருச்சியில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினோம். அதே போல் காவிரிக்காகவும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளோம். இன்று நடத்தியுள்ளது முதல் கட்ட போராட்டம் தான். விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவிரி ஆற்றில் இறங்கி காளை மாடுகளுடன் உழுது போராட்டம் நடத்தியவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
கடந்த 4-ந்தேதி திருச்சியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து பேசினார். நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது கோரிக்கையை வீடியோவாக பதிவு செய்து பிரதமருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.