ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்தார்.
பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது.
இந்த போராளிகள், பாலஸ்தீன மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்குகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் உருவானதின் 70-வது ஆண்டு விழா அங்கு கொண்டாடப்பட்ட வேளையில் அதை துக்க தினமாக பாலஸ்தீனர்கள் கருதினர்.இதையொட்டி நடந்த போராட்டங்களின்போது 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது. இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழி வகுத்தது.
இருப்பினும் தொடர்ந்து காசா எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.நேற்று முன்தினம் காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வாகனம், தாக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
இருந்தபோதும் இந்த தாக்குதல், இஸ்ரேல் படையினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.