வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராஜித.
காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்பனவே கூட்டமைப்பின் கோரிக்கைகள். இவை நீண்டநாள் பிரச்சினைகள்.
இவை உண்மையில் விரைவுபடுத் தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித, ‘தலைமை அமைச்சருக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பால் நிபந்தனை எதுவும் விதிக்கப்பட்டதா?’ என்ற கேள்விக்குப் பதில் வழங்குகையிலேயே, கனதியான இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிங்கள பேரினவாதத் தலைவரொருவரிடம் இருந்து இவ்வாறான கருத்து வெளிப்படுவது சிறப்பானது. அதுவும் அமைச்சரவையின் பேச்சாளர் என்ற அடிப்படையில் ஓர் உத்தியோகபூர்வ நிகழ்வில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது கனதியானது; மெச்சத்தக்கது, வரவேற்கத்தக்கது.
இதை அமைச்சரவையின் நிலைப்பாடாகவும் அல்லது அதன் கருத்து வெளிப்பாடாகவும்கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஏவிளம்பி வருடத்தை வரவேற்றபோது, தமிழர் தாயகத்திடம் இருந்த கோரிக்கைகள் அதன் இறுதி நாளான இன்றும் தேக்க நிலையுடன் அப்பிடியேதான் இருக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காத்திரமான நகர்வுகள் முன்னெடுக்கப் படவில்லை.
காணி விடுவிப்புக்கள் எதிர்பார்க்கப்பட்டதைப்போன்று அமையவில்லை. பௌத்த மயமாக்கலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நிறுத்தப்பட வில்லை. இவ்வாறாக முற்றிலும் ஏமாற்றமடைந்த நிலையிலேயே தமிழர் தாயகம் ஏவிளம்பிக்கு விடைகொடுத்து விளம்பியை எதிர்கொள்கிறது.
இன்னும் சொல்லப்போனால், ஏவிளம்பியை வரவேற்றபோது, தமக்குரிய தீர்வு விடயத்தில் தமிழர் தாயகத்திடம் துளிர்த்துப் போயிருந்த சிறு நம்பிக்கை, விளம்பியை எதிர்கொள்ளும்போது இல்லவே இல்லை. அண்மையில் நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலும், அதன் பின்னர் தலைமை அமைச்சர் ரணில் – அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டு அரசுக்குள் ஏற்பட்ட பிடுங்குப்பாடுகளும், தமிழர்களின் கோரிக்கைகள் மட்டில் அதிலும் குறிப்பாக, புதிய அரசமைப்பு விடயத்தில் மிகப்பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.
இவ்வாறிருக்க ராஜித வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் தமிழர்களை சிறிதாவது ஆற்றுப்படுத்தவல்லவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால், ராஜிதவிடத்தில் உள்ள கருத்து வெளிப்பாடு, சிங்கள பேரினவாத அரசியல் பிரதிநிதிகள் மட்டில் உதிக்காத வரையில், இந்தத் தீவில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு விமோசனம் என்பது சாத்தியம் அற்ற ஒன்றே.
‘வடக்கு – கிழக்கு இணைந்தால் தமிழர் தாயகம் உருவாகும்’, ‘புதிய அரசமைப்பு உருவானால் நாடாளுமன்றத்தை விடவும் மாகாண சபைகள் கூடுதல் அதிகாரம் பெற்றுத் திகழும், அது தமிழர் தாயகம் உதயமாக வழிசமைக்கும்.
இதற்காகவா எமது சிப்பாய்கள் தத்தமது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்’ இவை அண்மையில் முடிவடைந்த உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் தலைவர் மகிந்தவிடம் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள்.
இவைதான் பதிலாகவும் அமைகின்றன விளம்பியிலாவது விடிவு கிடைக்குமா என்கிற கேள்விக்கு.
ஆக, இந்த நாட்டு அரசியலுடன் இனவாதம் இரண்டறக் கலந்துள்ள நிலை நீங்காத வரையில், சிறுபான்மை மக்கள் தெருவிலேதான். நடந்து முடிந்துள்ள குருதிச் சகதிக்கும் அதுவேதான் காரணம்.