யாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு வலிகாமம் வடக்கு மயிலிட்டி அம்மன் ஆலையத்திற்கு அருகில் உள்ள காணியில் நடைபெறவுள்ளது.
இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து இந்த தகவலை எமது செய்தி சேவைக்கு வழங்கினார் . மயிலிட்டி கட்டுவன் வீதிக்கு மேற்குப்புறமாக உள்ள தென்மயிலை, மயிலிட்டி வடக்கு, தையிட்டி கிழக்கு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் கீழ்வரும் காணிகளே இன்று விடுவிக்கப்படுகின்றன. குறித்த கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில், இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட படைத்தரப்பு அதிகாரிகளும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதேநேரம், எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பு மற்றும் ,ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீளாய்வுகளின் அடிப்படையில், மேலதிக காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.