பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை வீணடித்தால் இந்த ஆட்சிக்கும் கடந்த ஆட்சிக்கும் மக்கள் வித்தியாசம் காணமுடியாத நிலைமை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்று விவசாயிகள் இனமதத்தினைக்கடந்து உள்ளுர் வளத்தினை பாதுகாக்கவேண்டும்,உள்ளூர் வளத்தினை உள்ளூர் மக்களே பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தமிழ்பேசும் சமூகம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்துகின்றனர்.
மாவடியோடையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிக்கு மண் அகழ்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மாவடியோடையில் அகழப்படும் மண்,சட்ட விரோமான முறையில் வேறு மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.இதற்காக சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சூத்திரதாரியாக இருக்கின்ற புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்திற்குரிய மாவட்ட பொறுப்பதிகாரி இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டியவராக உள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஏனோதானோ என்று செயற்படுவதானது உள்ளூர் விவசாயிகளை உள்ளூர் மக்களை மிகவும் பாதிப்படையும் விடயமாகவுள்ளது.
அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.உள்ளூர் தேவைகளுக்கு கூடுதலாக இந்த மண் வழங்கள் பயன்படுத்தப்படவேண்டும் என அதில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எமது அபிவிருத்தி பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தியடையவேண்டிய தேவையிருப்பதனால் அந்த அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறுபட்ட மண் வகைகள் தேவையேற்பட்டுள்ளது.அந்தவகையில் உள்ளூர் தேவைகளுக்கு முதலிடம் வழங்கப்படவேண்டும்.உள்ளூர் தேவைப்பாடுகள் பூர்த்திசெய்யப்படும்பட்சத்திலேயே வெளிமாவட்டங்களுக்கு மண் கொண்டுசெல்ல அனுமதிக்கமுடியும் என அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த முடிவுக்கு அப்பால்பட்டவகையில் உள்ளூர் விவசாயிகளின் விவசாயம் சார்ந்த அபிவிருத்தி பணிகளுக்கு மண்ணை பயன்படுத்த அனுமதிக்காமல் வெளி மாவட்டங்களுக்கு மண்ணை கபளீகரம் செய்யும் செயற்பாடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்திற்குரிய அதிகாரிகள்,அமைச்சு இது தொடர்பில் தலையிட்டு உரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும். புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் பொறுப்பதிகாரி எதேச்சையான முறையில் உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிசெயற்படுவதன் காரணமாக அவர் அந்த பதவிக்கு பொருத்தமானவரா என்று விவசாயிகள் சிந்திக்கும் நிலையேற்பட்டுள்ளது.
இப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் காரணத்தினால் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்திற்கு தமிழ் மொழி தெரிந்த அதிகாரி ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பதன் மூலமே மக்களின் தேவைகளை உணர்ந்துசெயற்படக்கூடிய நிலையேற்பட்டும்.
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை வீணடித்தால் இந்த ஆட்சிக்கும் கடந்த ஆட்சிக்கும் மக்கள் வித்தியாசம் காணமுடியாத நிலைமை ஏற்படும்.