ரஷியாவில் சிகிச்சையின் போது தவறுதலாக உடலை பதப்படுத்தும் மருந்து கொடுத்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஷியாவில் உள்ள உல்யாநோவ்ஸ்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் எக்ட்ரினா (வயது 28) என்ற பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ஆபரேஷன் செய்வதற்காக லேப்ராஸ் கோப்பிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டது. அப்போது பார்மாலின் என்ற மருந்தை அவரது உடலில் செலுத்தினார்கள்.
இந்த மருந்து இறந்தவர்கள் உடலை பதப்படுத்துவதற்காக (எம்பார்மிங்) செலுத்தப்படும் மருந்தாகும். ஆனால் தவறுதலாக அவருக்கு செலுத்தி விட்டார்கள்.
இந்த மருந்தை செலுத்தியதும் அவரது உடலில் வெப்பநிலை அதிகரித்தது. கடுமையாக வயிற்றுவலி ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். அப்போதுதான் அவருக்கு செலுத்தப்பட்ட மருந்தை பரிசோதித்தனர். அது தவறுதலான மருந்து என்பது தெரியவந்தது.
பார்மாலின் மருந்து கடுமையான விஷத்தன்மை கொண்டதாகும். எனவே அவருடைய உடலில் விஷம் பாதிக்க தொடங்கியது. அவருக்கு மாற்று மருந்து கொடுத்து சரி செய்ய முயற்சித்தனர். ஆனாலும் கட்டுக்குள் வரவில்லை.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவரது உயிரை மீட்க டாக்டர்கள் எடுத்த போராட்டம் வெற்றிபெறவில்லை. 3 வாரம் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்தார்.