வெசாக் வாரத்திற்காக மே தினத்தை கைவிட முடியாது. 1ஆம் திகதியே மே தினத்தை நடத்துவோம் எனவும் யாழ்ப்பாணத்தில் மே முதலாம் திகதியும் கொழும்பில் 7 ஆம் திகதியும் மே தினத்தை கொண்டாடுவோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதுடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்மதி வாரமாக உள்ளமையினால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக காரணமும் கூறியுள்ளனர். எவ்வாறிருப்பினும் வெசாக் வாரம் என்ற காரணத்தினால் மே தினத்தை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. கொழும்பில் வெசாக் வாரத்தை மக்கள் கொண்டாடும் காரணத்தினால் எம்மால் மக்களுக்கு இடைஞ்சலாக செயற்பட முடியாது.
இம்முறை ஜே.வி.பி. யின் மே தினக் கூட்டத்தில் வழமையை விடவும் மக்கள் அதிகமாக கலந்துகொள்வார்கள். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எனினும் கொழும்பில் பாரிய மே தினக் கூட்டத்தை நடத்துவதனால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். மாநாயக்க தேரர்களும் எமக்கு இந்த காரணங்களை தெளிவுபடுத்தினர். ஆகவே மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நாம் மீறவில்லை. மே தினத்தன்று ஜே.வி.பி. யின் தொழிலாளர் உரிமைக்கான மே தினக் கூட்டம் கட்டாயம் இடம்பெறும்.
மே மாதம் முதலாம் திகதி எமது மே தினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றோம். எமது தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரையும் இணைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் எமது மே தினத்தை நடத்துவோம். 7 ஆம் திகதி கொழும்பில் எமது மே தினக்கூட்டம் வழமைபோலவே இடம்பெறும். இம்முறை பொரளை சந்தியில் ஆரம்பமாகும் எமது பேரணி கிருலப்பனை பி.ஆர்.சி. மைதானத்தில் மே தினக்கூட்டத்துடன் நிறைவடையும்.
தற்போது நாட்டில் தொழில் வர்க்கத்தினர் பாரிய நெருக்கடியினை சந்தித்துள்ள நிலையில் எமது சாதாரண வர்க்க மக்களுக்காக போராடவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. வரி சுமையில் மக்கள் நெருக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான செயற்பாடுகள் எவையும் இல்லாது போயுள்ளன. வேலைவாய்ப்புகள் இல்லாது எமது இளைஞர்கள் தவிக்கின்றனர். மனித உரிமை மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டே நாம் எமது மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.