பம்பலப்பிட்டி – கொத்தலாவல அவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை திரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கடத்தல் மற்றும் படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் தற்போது விளக்கமறியலில் உள்ள 8 நபர்களும் பயன்படுத்தியதாக நம்பப்படும் 13 தொலை பேசி இலக்கங்கள் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அதனைவிட ஐந்து தொலை பேசிகள் குறித்தும் தற்சமயம் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் குறித்த தொலைபேசி இலக்கங்கள் 13 மற்றும் 5 தொலைபேசிகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள குற்றத் தடுப்புப் பிரிவினர் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 67 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் ஊடாக உத்தரவினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதன்படி பொலிஸாரினால் கண்டறியப்பட்டுள்ள 13 தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 5 தொலைபேசிகளின் எமி இலக்கங்களை மையப்படுத்தி பூரண அறிக்கை ஒன்றினை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, நீதிவானுக்கு வழங்க டயலொக், மொபிடல், எட்டிசலாட், ஹச் மற்றும் எயார்டெல் ஆகிய தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை விட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் டப்ளியூ.பி. சி.ஏ.எல். 3159 எனும் இலக்கத்தை உடைய காரை இரசாயன பகுப்பாய்வுக்கும், ஜீன் டெக் நிறுவனத்தின் ஆய்வுக்கும் உட்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் இதற்கான அனுமதியினையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
காரினை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் ஊடாகவும் தடயங்களை சேகரிக்க பொலிஸார் இதனூடாக அனுமதி பெற்றுள்ளனர்.
இதனைவிட கடத்தல் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட இரத்தக் கறை தொடர்பில் மரபணு பரிசோதனை (டி.என்.ஏ) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை முன்னெடுத்த ஜீன் டெக் நிறுவனத்தின் ஆய்வுக்கு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரினை உட்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் சகீப் சுலைமான் 24 ஆம் திகதி மாவ னல்லை பகுதியில் வைத்து சடலமாக மீட் கப்பட்டார்.
இதுவரையில் அவரிடம் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவாரக கடமை யாற்றிய ஊழியர் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.