அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவினர் இன்று காலை இரண்டாம் நாள் நடைபயணத்தை தொடங்கினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் ஆ.ராசா, வி.பி. துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சாத்தமங்கலம், கள்ளூர் பாலம் வழியாக திருமானூர் சென்றது. பின்னர் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வழியாக கும்பகோணம் சென்றடைகிறது.
முன்னதாக நடைபயணத்தின்போது திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒட்டு மொத்த தமிழகமே காவிரி நீருக்காக போராடி கொண்டிருக்கும் போது அதை திசை திருப்பும் வகையில் ஐ.பில்.எல். போட்டிகளை நடத்துவது வேதனை அளிக்கிறது. இந்த போட்டிகளை நடத்த வேண்டாம் என சொல்லவில்லை. தள்ளி போடுங்கள் அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்றுங்கள் என வலியுறுத்தியும் அதனை மீறி நடத்துவது கண்டனத்திற்கு உரியது.
சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டினால், நாங்கள் பச்சை கொடி காட்டுவோம் என தமிழக அமைச்சர் கூறியுள்ளது அக்கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும், இது வரலாற்று பிழையாக அமையும்.ஜெயலலிதா இல்லை என்பது இப்போது நமக்கு வேதனையை தருகிறது. அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பது தெரிய வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களே ஒன்று திரண்டு போராடி கொண்டிருக்கும் போது மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போவது மாபெரும் வரலாற்று கரையாக அமைந்து விடும். மத்திய அரசை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்கிறது.இதேபோல் ஐ.பில்.எல். போட்டிகள் நடத்தும் நிறுவனத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.