யாழ்.மாவட்டத்தில் இருந்து இடமாற்றலாகி சென்றுள்ள இந்திய துணை தூதுவர் ஆர். நடராஐனுக்கு பிரிவுபசார நிகழ்வு நடத்துவதற்காக வடமாகாணசபை 41 ஆயிரத்து 565 ரூபாய் செலவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இருந்த நடராஜன் இங்கிருந்து டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தை விட்டுச்சென்ற அவருக்கு வடக்கு மாகாண சபை பிரிவு உபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் அவருக்கு மாகாண சபையின் சார்பாக நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்த இந்த உபசார நிகழ்வுக்கு மொத்தமாக 41 ஆயிரத்து 565 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என வடக்கு மாகாணப் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த செலவீனம் மாகாண சபை உறுப்பினர்களின் நலன்புரிச் செலவீனத்தில் இருந்தே செலவளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
அத்துடன், துணைத் தூதுவருக்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார நிகழ்வுக்கு எவ்வளவு பணம், எந்த நிதியில் இருந்து செலவு செய்யப்பட்டது என வடக்கு மாகாண பேரவைச் செயலகத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கேட்கப்பட்ட வினாவுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள பதிலிலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன.