கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளின் போது முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி தீ வைத்தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இராணுவ கோப்ரல்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் சிறப்புக் குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். கண்டி – பூஜாபிட்டிய பொலிஸ் பீர்வில் அம்பதென்ன பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தீ வைப்பு தொடர்பில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கஹவத்த, அம்பதென்ன பகுதியை வசிப்பிடமாக கொண்ட இராணுவ கோப்ரல் தர வீரர்களான, 34 வயதுடைய புத்தளம்,சிங்ஹவில்லுவத்தவில் உள்ள 143 ஆவது படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் 475030 எனும் இராணுவ இலக்கத்தை உடைய சுபசிங்க முதியன்சலாகே அனுர பண்டார விஜேசிங்க என்பவர் கைதானவரில் ஒருவராவார். கைதான மற்றையவர் 38 வயதுடைய, கெக்கிராவ – தம்புலுஹல்மில்லவிலுள்ள இயந்திர மற்றும் காலாற்படை ரெஜிமென்ட்டின் பயிற்சி பாடசாலையில் சேவையாற்றிய மல்வானே கெதர ஹசித்த விஜேரத்ன ஆவார்.
2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிகள், தண்டனை சட்டக் கோவையின் கீழ் கைதகையுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. . அதன்படி இதுவரை பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் முன்னெடுக்கும் பிரதான விசாரணைகளில் கைதான சந்தேக நபர்கள் 15 பேர் ஆவர். அதில் ஒரு முன்னாள் இரானுவ வீரரும் உள்ளடங்கிறார். இந் நிலையிலேயே நேற்று பயங்கரவாத புலனயவுப் பிரிவின் சிரப்புக் குழு தற்போது சேவையில் உள்ள இரு இராணுவ வீரர்களைக் கைது செய்துள்ளனர்.
கண்டி இனவாத வன்முறைகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, அதன் பதில் பணிப்பாளர் ஜகத் விஷாந்த தலமையில் விஷேட மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.