கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், சுமார் பத்து ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு இராணுவத்தினர் துயிலுமில்லத்தில் இரவோடு இரவாக இரண்டு அடுக்கு வேலிகள் அமைத்து முகாம் அமைத்திருந்தனர்.
அன்று தொடக்கம் இன்று வரை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கல்லறைகளுக்கு மேல் கழிப்பறைகளும், சமையலறைகளும் அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லமும் விடுவிக்கப்பட்டுள்ளது.அங்கு நிலைகொண்டிருந்த படையினர் நேற்று முன்தினம் முதல் படிப்படியாக வெளியேறியுள்ளனர். எருக்கன் பற்றைகளால் சூழ்ந்து காணப்படும் மாவீரர் துயிலுமில்லத்தில், கல்லறைகள் உடைக்கப்பட்டு பொதுமக்களின் காணிகளுக்குள் மாவீரர் துயிலுமில்லத்தின் சிதைவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம் காணியை அமைதியான முறையில் பேணுவதற்கும், அங்கு முதற்கட்டமாக மரங்கள் நாட்டப்பட்டு பசுமை பிரதேசமாக மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.