ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் 5 போர்க்கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை வருகிற 13-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் பார்க்கலாம்.
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ராணுவ கண்காட்சி வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதை முறைப்படி வருகிற 12-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
இதற்காக திருவிடந்தையில் 2 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் வந்து சேர்ந்துள்ளன.
நேற்று மாலை கண்காட்சி நடைபெறும் இடத்தில் முப்படை வீரர்களின் சாகச ஒத்திகை, அணிவகுப்பு நடந்தது. இதனை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவ உற்பத்தித்துறை செயலாளர் அஜய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் 5 போர்க்கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை வருகிற 13-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் பார்க்கலாம்.
இதற்காக தீவுத்திடலில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் அங்கிருந்து பஸ்கள் மூலம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை போர்க்கப்பல்களை பார்க்கலாம்.
இதேபோல் வருகிற 13-ந்தேதி, 14-ந்தேதிகளில் பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பார்வையாளர்கள் www.defexpoindia.in என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.