நியூசிலாந்தில் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை 6 வயது இந்திய சிறுமி தடுத்து நிறுத்தினார்.
நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தை சேர்ந்தவர் சுகைல் படேல். இந்தியரான இவர் அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார். வீட்டின் அருகே எலெக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு முகமூடி அணிந்த 6 கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் கையில் கோடாரிகளை வைத்திருந்தனர். திடீரென புகுந்த அவர்கள் கடையில் இருந்த லட்சக் கணக்கான ரூபாயை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் கொள்ளையர்களை தடுத்தனர். எனவே, அவர்களை கோடாரியால் வெட்டி தாக்கினர். அந்த நேரம் அங்கு கடை உரிமையாளர் சுகைல் படேலின் 6 வயது மகள் சாரா படேல் வந்தாள்.
ஊழியரை தாக்கி கொண்டிருந்த ஒரு கொள்ளையனின் காலை பிடித்து வாரி விட்டாள். இதனால் நிலை குலைந்த அவன் தவறி விழுந்தான். இதற்கிடையே கொள்ளையர்கள் தாக்குதலால் பக்கத்து அறையில் நிலை குலைந்து கிடந்த தனது தாத்தாவுக்கு உதவினாள்.
அதற்குள் போலீசார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் நடக்க இருந்த பெரும் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.
இக்காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இதைப்பார்த்த சுகைல்படேல் தனது மகளின் திறமையை பார்த்து பெருமைப்படுவதாக கூறினார்.