திருப்பதியில் போலீஸ் எனக்கூறி நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதி கொர்ல கொண்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). நிதி நிறுவன அதிபர். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு, கிருஷ்ணமூர்த்தி தனது நிதி நிறுவனத்தில் தனியாக இருந்தார்.
அப்போது, அங்கு 7பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள், தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்தனர். நிதி நிறுவனத்தை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி நூதனமாக ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி திருப்பதி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு திருச்சானூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
சென்னையை சேர்ந்த சயத் ஜாவித் (வயது 30), பெங்களூரை சேர்ந்த அருள்செல்வம் (30) என்பதும், கிருஷ்ணமூர்த்தி நிதி நிறுவனத்தில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.