பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள, பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக 16 நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவருவதற்கான மகஜர் நாளை (06) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளின் இன்பங்களை அனுபவித்துக் கொண்டு இதற்கு மேலும் அரசாங்க தரப்பில் இவர்களுக்கு இருக்க முடியாது எனவும், அவ்வாறு இருப்பது பண்பாடான ஒரு நடவடிக்கை அல்லவெனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தற்பொழுது வரை 15 ஐ.தே.க. யின் எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்களை அரசாங்கத்துக்குள் வைத்திருப்பது பொருத்தமானது அல்லவெனவும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.