காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டத்தை அந்த மாநில அரசு தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்பதற்காக கூடுகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்-அமைச்சர் மறுக்கிறார். இதில் முதல்-அமைச்சருக்கு என்ன தயக்கம்?
முதல் -அமைச்சருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பிரதமரை சந்தித்து நெருக்கடியை கொடுக்க வேண்டும்.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என சதானந்த கவுடா சவால் விட்டிருக்கிறார். இது மத்திய அரசின் சதி திட்டம்.
பிரதமருக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும். கேரள அரசின் சிறுவாணி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அக்கிரம செயல்.
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தொடரும். இதில் மற்ற கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு இருக்காது. உள்ளாட்சி தேர்தலில் நேரடியாக தலைவர் தேர்தலை ரத்து செய்து விட்டு உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்பது குதிரை பேரத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு வைகோ கூறினார்.