தோல் தானம் செய்ய பொதுமக்கள் ஆர்வம்

356 0

201609081031056007_stanley-hospital-to-donate-skin-skin-bank-public-interest_secvpfஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தோல் வங்கி தோல் தானம் செய்ய பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய்துள்ளனர்.

ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கியை போல தோல் வங்கியும் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு ஆஸ்பத்திரியில் சென்னை ஸ்டான்லியில் தோல் வங்கி தொடங்கப்பட்டு இருக்கிறது.

அழகியல் துறையில் கடந்த வாரம் ரூ.70 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட தோல் வங்கிக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

மூளைச்சாவு, இயற்கை மரணம் அடைந்தவர்களிடம் இருந்து முதுகு, பின்னங்கால் மற்றும் பின்னால் தொடையில் தோல் பெறப்பட்டு உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்படுகிறது.

தீ, அமிலம், மின்சாரம், ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் வங்கியில் இருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இதுகுறித்து மருத்துவ மனை டீன் (பொறுப்பு) டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறியதாவது:-

நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கப்பேடு லட்சுமிநகரை சேர்ந்த சித்ரா (41) என்பவரின் உடலில் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவருடைய தோலும் தானமாக பெறப்பட்டது.

அதேபோல இயற்கையாக மரணம் அடைந்த மற்றொருவரிடம் இருந்தும் தோல் தானம் பெறப்பட்டுள்ளது. தோல் வங்கி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய்துள்ளனர்.

தற்போது மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந்தவர்களிடம் இருந்து மட்டும் தோல் தானம் பெறப்படுகிறது. வரும் காலத்தில் உயிருடன் இருப்பவர்களிடத்தில் இருந்தும் தோல் தானம் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தானமாக பெறப்படும் தோல் பரிசோதனைக்கு பிறகு சுத்திகரித்து பதப்படுத்தப்படும். 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 5 ஆண்டுகள் வரை தோல் பராமரிக்கப்படும்.தீ போன்ற விபத்துகளால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக பெறப்பட்ட தோல் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

15 நாட்களில் புதிய தோல் வளர்ந்த பிறகு மேலே பொறுத்தப்பட்ட இந்த தோல் தானாகவே உதிர்ந்து விடும் என்று அழகியல் துறைத்தலைவர் ஜி.ஆர்.ரத்தினவேல் தெரிவித்தார்.தோல் வங்கி விரைவில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும் தொடங்கப்பட உள்ளது. தீக்காயத்திற்கு தனி சிகிச்சை பிரிவு இங்கு உள்ளது. தோல் வங்கி அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டன என்று டீன் நாராயணபாபு தெரிவித்தார்.