15-ந்தேதி முதல் 17-ந்தேதிவரை அண்ணா பிறந்த நாள்

391 0

201609081050238635_jayalalithaa-announces-anna-birthday-generalmeeting-on-15_secvpfபேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2016 முதல் 17.9.2016 வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2016 முதல் 17.9.2016 வரை மூன்று நாட்கள் ‘பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு, பேரறிஞர் அண்ணாவுடைய பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15-ந்தேதி அன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை வெளியிட்டுள்ளார்.